பதிவு செய்த நாள்
30
ஆக
2014
12:08
சேலம்: சேலம் மாவட்டம் முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தியில், நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்று, விநாயகர் ஸ்வாமி அவதரித்தநாளாகும். அதேபோல், இந்த ஆண்டும், நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளில், பல்வேறு வடிவங்களில் தயார் செய்யப்பட்ட சிலைகளை வைத்து, பூஜை செய்யப்பட்டது. அதிகாலை முதல், ஸ்வாமியை பிரதிஷ்டை செய்து, சிறப்பு யாகம் நடத்தி, பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு கொழுக்கட்டை, சுண்டல் போன்ற பிரசாதமும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மூன்று நாள், ஐந்து நாள் மற்றும் ஏழு நாட்கள் பூஜிக்கப்பட்டு, நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்படும். அரசின் கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்து, அனைத்து பகுதிகளிலும், களி மண்ணால் செய்யப்பட்டு விநாயகர் சிலைகளே வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.சேலம் ராஜகணபதி கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, அதிகாலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. தங்கக்கவச அலங்காரத்தில் ராஜகணபதி அருள்பாலித்தார். அதேபோல், மாநகரில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
* ஆத்தூர், ராணிப்பேட்டை விநாயகர் கோவிலில், 23 அடி உயரத்தில், விநாயகர், நரசிம்மர், ஆஞ்சநேயர் என, மூன்று தலை கொண்ட விநாயகரும், லட்சுமி மற்றும் குபேரர் உள்ள விநாயகர் சிலையை, நேற்று, காலை 7 மணியளவில், பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. ஆத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள, வெள்ளை விநாயகர் கோவிலில், சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தது.
* இடைப்பாடி, கொங்கணாபுரம், பூலாம்பட்டி பகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள், சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இடைப்பாடி, கொங்கணாபுரம் பகுதியில், 65 இடங்கள், பூலாம்பட்டி, சித்தூர் பகுதிகளில், 36 இடங்களில், போலீஸ் அனுமதியோடு சிலைகள் வைக்கப்பட்டன. ஓமலூரில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில், 50 இடங்களிலும், காடையாம்பட்டி ஒன்றியம் பகுதியில், 42 இடங்களிலும், விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
* ஓமலூர் பஸ் ஸ்டாண்டில், ஓமலூர் வட்டார அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில், 7 அடி உயரத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்தனர். ஓமலூர் காமராஜர் நகரில், விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் சுண்டல், பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டன.
* வாழப்பாடி பகுதியில், 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்த இளைஞர்கள், சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர். பிரசித்தி பெற்ற பிங்கள விநாயகர் வெள்ளிக் கவச அங்கியில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* பேளூர், தலைவாசல், தம்மம்பட்டி, பனமரத்துப்பட்டி, தாரமங்கலம், சங்ககிரி, ஜலகண்டாபுரம், மேட்டூர், மேச்சேரி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.