பதிவு செய்த நாள்
30
ஆக
2014
12:08
கொளத்துார்: விநாயகருக்கு உகந்த உணவுப் பொருளான மக்காச்சோளம், இளநீர் ஆகியவற்றால் உருவான, வித்தியாசமான விநாயகர் சிலை, பகுதிவாசிகளை அதிகளவில் ஈர்த்தது. சென்னை கொளத்துார் லட்சுமி அம்மன் கோவில் அருகே, செங்குன்றம் சாலை சந்திப்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 7,000 மக்காச்சோளங்களால் உருவாக்கப்பட்ட, 25 அடி உயர விநாயகர் சிலை, இந்து முன்னணி சார்பில், அமைக்கப் பட்டுள்ளது. வித்தியாசமான அந்த சிலையை கொளத்துார் சுற்றுவட்டாரப் பகுதி வாசிகள் ஆர்வத்துடன் வந்து பார்த்து, வணங்கி சென்றனர். இதுகுறித்து விழாக்குழுவினர் கூறியதாவது: கடந்த ஒருவாரமாக, 10க்கும் அதிகமானோரின் உழைப்பில், 7000 முழு மக்காச்சோளங்கள் மூலம் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு இன்று முதல் (நேற்று) ஏழு நாட்கள், மூன்று வேளை அன்னதானம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அஸ்தினாபுரத்தில்...: அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலையில், 5000 விநாயகர் சிலைகளுடன் கூடிய கண்காட்சி நேற்று துவங்கியது. பெண்கள், ஆண்கள், கல்லுாரி மாணவர்கள், என ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கேரம், செஸ் மற்றும் கிரிக்கெட் விளையாடும் சிலைக÷ ளாடு, நவதானிய விநாயகர் சிலைகளும் பகுதிவாசிகளை ஈர்த்து வருகின்றன.
புரசைவாக்கத்தில்...: புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், விநாயகர் கோவில் போல, பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில், விநாயகர் தவிர பிற கடவுள்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்: வடபழனி முருகன் கோவிலில், நேற்று காலை உற்சவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷகம், பூஜைகள், மற்றும் தீபாராதனை நடந்தன. இதைத்தொடர்ந்து நேற்று இரவு ௭:௦௦ மணிக்கு சுவாமி வீதி உலா நடந்தது. அதேபோல,
மயிலாப்பூர் கபாலீஸ்வரர், வரசித்தி விநாயகர், திருவான்மியூர் மருந்தீசுவரர், புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர், கே.கே.நகர் சக்தி விநாயகர் கோவில், அசோக்நகர் விநாயகர் கோவில், தி.நகர் சிவ விஷ்ணு கோவில், கோடம்பாக்கம் பரத்வாஜேஸ்வரர் கோவில், மேற்கு மாம்பலம் வல்லப விநாயகர் கோவில் உள்ளிட்ட நகரின் அனைத்து கோவில்களிலும், நேற்று விநாயகருக்கு, சிறப்பு வழிபாடுகள், வீதியுலாக்கள் நடந்தன. தனியாரால் வைக்கப் பட்டுள்ள சிலைகள், வரும் ௩௧ம் தேதியும், இந்து அமைப்புகளால் வைக்கப்பட்டுள்ள சிலைகள், அடுத்த மாதம் ௭ம் தேதியும் கரைக்கப்பட உள்ளன.