சோலைமலை முருகன் கோயிலில் ரூ.70 லட்சத்தில் தங்க கொடிமரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2014 01:08
அழகர்கோவில் : சோலைமலை முருகன் கோயிலில் ரூ.70 லட்சத்தில் தங்க கொடிமரம் அமைக்கும் பணி நடக்கிறது. இக்கோயிலை புதுப்பித்து சிற்பங்கள், புதிய மகா மண்டபம் மற்றும் கருவறை பணிகள் ரூ.5 கோடியில் நடந்தன. ஜூன் 8ல் கும்பாபிஷேகம் நடந்தது.தற்போது இக்கோயில் முன்புள்ள 13 அடி உயர கொடிமரத்தில் தாமிரத் தகடுகள் அமைக்கப்பட்டிருந்தன. இவை ஆங்காங்கு சேதமுற்றும், அழகில்லாமலும் இருந்தது. இதை மாற்றி அமைக்க கள்ளழகர் கோயில் தக்கார் வெங்கடாஜலம் உத்தரவிட்டார். தங்க கொடிமரம் அமைக்க ரூ.70 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதற்கு தேவையான இரு கிலோ தங்கம் பல்வேறு கோயில்களில் இருந்து பெறப்பட்டது. தங்கத் தகடுகள் அமைக்கும் பணியை தக்கார் வெங்கடாஜலம் துவக்கி வைத்தார்.நிர்வாக அதிகாரி வரதராஜன், நகைகளை சரிபார்க்கும் அதிகாரி கருணாநிதி முன்னிலையில் 40 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பணியை கண்காணிக்க ஏராளமான கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கோயிலை சுற்றி 24 மணி நேரம் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொடிமரம், பலபீடத்திற்கு தங்கத் தகடுகள் பொருத்தி ஆவணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தவும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.