பதிவு செய்த நாள்
01
செப்
2014
12:09
மைசூரு:உலக புகழ் பெற்ற தசரா விழாவில் பங்கேற்கும், அர்ஜுனா தலைமையிலான யானைகள் மீது, மணல் மூட்டைகளை ஏற்றி, நேற்று காலை பயிற்சி அளிக்கப்பட்டது. மைசூரு தசரா விழா, செப்., 24ம் தேதி துவங்குகிறது. விஜய தசமியன்று நடக்கும் ஜம்பு சவாரியில், யானைகள் ஊர்வலம் நடக்கும். அன்றைய தினம், 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை, அர்ஜுனா யானை சுமந்து செல்லும்.இதற்காக, யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் ஒருகட்டமாக, அர்ஜுனா மீது, அம்பாரி எடையை போல் மணல் மூட்டைகள், மற்ற யானைகளுக்கு, சிறிய அளவிலான மணல் மூட்டைகள் ஏற்றப்பட்டு, மைசூருவின் சயாஜிராவ் ரோட்டில் பாகன்கள் பயிற்சி அளித்தனர். பொதுவாக, யானைகள் வன சூழ்நிலையில் ஒன்றி போயிருக்கும். யானைகளின் முதுகின் மீது, எந்தவிதமான பாரமான பொருட்களும் ஏற்றி வைக்கப்பட வாய்ப்பில்லை. இதனால், யானைகள், நகருக்குள் வந்த பின், அவைகளுக்கு, அனைத்து விதமான பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று காலை, மணல் மூட்டையுடன் அரண்மனை வளாகத்திலிருந்து புறப்பட்ட யானைகள், பன்னி மண்டபம் வரை சென்று, பின், அரண்மனை வளாகத்துக்கு திரும்பின. இந்த யானைகளுக்கு, வெவ்வேறு வகையான ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்படுகிறது. மகாராணி பிரமோதா தேவி வேண்டுகோளின்படி, நேற்றிலிருந்து, யானைகளின் இருப்பிடம், அரண்மனை வளாகத்திலிருந்து, டோபி கார்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.