பதிவு செய்த நாள்
08
செப்
2014
10:09
திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம், வரும் 11ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, நேற்று பூஜைகள் தொடங்கின. திருப்போரூரில் கந்தபெருமான், வள்ளி, தெய்வானையுடன், சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். சிதம்பர சுவாமிகள் வழிபட்ட ஸ்ரீசக்கரம் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள், கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி நடந்து வந்தது.கடந்த மாதம், கொடிமர பிரதிஷ்டை நடந்தது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா, வரும் 11ம் தேதி காலை 9:00 மணிக்கு தொடங்கி, 11:00 மணிக்குள்ளாக நடைபெறுகிறது. விழாவிற்காக, சுவாமி மலையில் இருந்து யானை வரவழைக்கப்படஉள்ளது. முன்னதாக நேற்று, கும்பாபிஷேகம் ஒட்டிய யாகசாலை பூஜைகள் தொடங்கின.தனபூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தீபாராதனை ஆகியவை நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நேற்று முன்தினம், மாவட்ட ஆட்சியர், கோவிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். கும்பாபிஷேக கலசநீர், பக்தர்கள் மீது தெளிக்கப்படும் இடங்கள், ராஜகோபுரம், விமானங்கள் அருகே செல்ல ஏற்படுத்தப்பட்ட வழித்தடங்கள், வாகனங்கள் நிறுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்கள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை, அதிகாரிகளுடன் அவர் ஆய்வு செய்தார். அப்போது, கோட்டாட்சியர் தங்கராஜு, திருப்போரூர் வட்டாட்சியர் ஆறுமுகம், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்புடைய கோயில்கள் :