பதிவு செய்த நாள்
08
செப்
2014
10:09
கொளத்துார் : விநாயகர் சதுர்த்தி விழா, நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மக்காச்சோள விநாயகர், சுற்றுச்சூழல் பாதிப்பின்றி பக்தர்களுக்கு பிரசாதமானார். சென்னை, கொளத்துார் லட்சுமி அம்மன் கோவில் அருகே, இந்து முன்னணி சார்பில், 7 ஆயிரம் மக்காச்சோளங்களால், 25 அடி உயர விநாயகர் சிலை, அமைக்கப்பட்டு இருந்தது.அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவு மற்றும் விளக்கு பூஜை உள்ளிட்ட விநாயகர் சதுர்த்தி விழாக்கள் நேற்றுடன் முடிவடைந்தது. மற்ற பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் ஏரி, கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.மக்காச்சோளங்களால் வித்தியாசமாக அமைக்கப்பட்ட விநாயகர் சிலைக்கு, நேற்று மதியம் 2:00 மணிக்கு, விடையாற்றி உற்சவம் நடந்தது. அதன்பின், சிலை பிரிக்கப்பட்டு பக்தர்களுக்கு ’பிரசாதமாக’ அளிக்கப்பட்டது. இதுகுறித்து, பக்தர்கள் கூறுகையில், ’விநாயகருக்கு, உகந்த உணவுப்பொருளான மக்காச்சோளம் மூலம், பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அதை பிரித்து பிரசாதமாக வழங்கியதால், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை’ என்றனர்.