பதிவு செய்த நாள்
12
செப்
2014
12:09
பழநி: பழநி மலைக்கோயில் ரோப்காரில் பொருத்துவதற்காக புதிய ஷாப்ட், கியர்செட் உதிரிபாகங்கள் வந்துள்ளன. அடுத்த வாரத்திலிருந்து பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படவுள்ளது. பழநி மலைக்கோயிலுக்கு 3 நிமிடத்தில் எளிதாக செல்லும் வகையில் ’ரோப்கார்’ இயக்கப்படுகிறது. இதில் ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கடந்த ஜூலை 28ல் நிறுத்தப்பட்டது. மேல்தளம், கீழ் தளத்திலுள்ள உருளை, பல் சக்கரங்கள் கழற்றப்பட்டு, தேய்ந்த பகுதிகள் மாற்றப்பட்டன. இரும்பு கம்பிவட கயிற்றில் ஆயில் மற்றும் கிரீஸ் தடவப்பட்டுள்ளது. ’ரோப்காரின்’ 8 பெட்டிகளும் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளன.
’ரோப்கார்’ பாதுகாப்பு குழுவினர், தனியார் நிறுவனத்திடம் ரோப்கார் கீழ்த்தளம் மற்றும் மேல்தளத்தில் புதிய ஷாப்ட்கள் மாற்றவேண்டும். சிறிது தேய்ந்துள்ள பல்சக்கரம், உருளைகளை முற்றிலும் மாற்ற வேண்டுமென பரிந்துரைத்தனர். அதன்படி, கோல்கட்டாவிலிருந்து வரவழைக்கப்பட்ட புதிய இரண்டு ஷாப்ட்கள், கோவையில் தயாரிக்கப்பட்ட பல்சக்கரங்கள், உருளைகள் வந்துள்ளன. அவை ரோப்கார் மோட்டாரில் பொருத்தப்பட உள்ளன. அதன்பின், ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடைக் கற்கள் வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும். பக்தர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்தபின் அடுத்த வாரத்திலிருந்து ’ரோப்கார்’ இயக்கப்படும். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,”ரோப்கார் எட்டு பெட்டிகளிலும் வண்ணம் பூசப்பட்டுள்ளது. அடுத்தவாரம் சோதனை ஓட்டம் நடத்தியபின் பக்தர்களுக்காக இயக்கப்படும்,” என்றார்.