பதிவு செய்த நாள்
19
செப்
2014
10:09
திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில், குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து வந்து, உறியடித்தனர்; வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. ஸ்ரீதேவி தாயார், பூதேவி தாயார் சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு ஆராதனை மற்றும் குழந்தை கிருஷ்ணருக்கு, மலர் ஊஞ்சல் உற்சவம், தாலாட்டு நடந்தது.
அதன்பின், சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை நடந்தது. சிறுவர், சிறுமியர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து, பாடல்கள் பாடினர். கோலாட்டம், கும்மியாட்டத்துடன், தாயார்கள் மற்றும் எம்பெருமானுடன் ஸ்ரீகிருஷ்ணர் உறியடி மற்றும் வலுக்கு மரம் ஏறும் மைதானத்துக்கு எழுந்தருளினார். கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த சிறுவர், சிறுமியர் உறியடித்து மகிழ்ந்தனர். வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் இளைஞர்கள் பங்கேற்று, பரிசு பொருளை எடுத்தனர். தொடர்ந்து, சுவாமி வீதி உலா நடந்தது. இதேபோல், அவிநாசியில் உள்ள பூமி நீளாதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பூஜை நடைபெற்றது. அதன்பின், கோவில் முன், நடப்பட்டிருந்த 25 அடி உயர வழுக்கு மரத்தில், இளைஞர்கள் உற்சாகமாக ஏறினர். அதன்பின், உறியடி உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கரிவரதராஜர், வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.