பதிவு செய்த நாள்
27
மே
2011
05:05
எட்டு என்ற எண்ணை மோசமான எண்ணாக சித்தரிக்கின்றனர். ஆனால், செல்வத்தின் வடிவமான மகாலட்சுமி ஸ்ரீவில்லிப்புத்தூரிலுள்ள துளசி தோட்டத்தில் ஆண்டாள் என்ற பெயரில் அவதாரம் செய்தது ஆடிமாதம் 8ம் தேதி என்கிறது தல புராணம். அது மட்டுமல்ல செல்வநாயகியான மகாலட்சுமி அஷ்டலட்சுமி யாக எட்டு வகை செல்வங்களை அருளுபவளாக சித்தரிக்கப்படுகிறாள். குழந்தைச் செல்வம் தருபவள் சந்தான லட்சுமி, பயிர் வளர்ச்சிக்கு உதவி உணவு உற்பத்தியை பெருக்கி நம் பசி போக்குபவள் தானிய லட்சுமி, ஆற்றலைத் தருபவள் வீர லட்சுமி, பாற்கடலில் தோன்றி திருமாலின் மார்பில் குடியேறியவள் ஆதிலட்சுமி, செல்வத்தை வாரி வழங்குபவள் தனலட்சுமி, நோயற்ற வாழ்வளித்து சகல சவுபாரியங்களையும் தருபவள் ஐஸ்வர்யலட்சுமி, எதிலும் வெற்றி வாகை சூடச் செய்பவள் விஜயலட்சுமி, யானை போன்ற பலத்தை தருபவள் கஜலட்சுமி.
சீனாவில் 8 என்ற எண்ணை மிகச்சிறந்த எண்ணாகக் கருதுகின்றனர். அது மட்டுமல்ல கடவுளை எட்டு நிலைகளில் சிலைவடித்து வணங்குகிறார்கள்.
1. சைலீ - கற்சிலை
2. தாருமயீ - மரச்சிலை (மதுரை குரு வித்துறை சித்திரரத வல்லபப் பெருமாள்)
3. லவுஹீ - உலோக சிலை
4. லாக்ஷா - அரக்கு சிலை
5. லேக்யா - ஓவிய வடிவம் (குற்றாலம் சித்திரசபை நடராஜர்)
6. ஸைகதீ - சுதை
7. மணிமயீ - நவரத்தின சிலை (சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி சிவாலயத்திலுள்ள மரகதலிங்கம்)
8. மனோமயீ - மானசீகமாக மனதுக்குள் வணங்கும் உருவம். எனவே எட்டு என்ற எண் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. தெய்வங்களே அந்த எண்ணின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளன.