பதிவு செய்த நாள்
23
செப்
2014
12:09
உத்திரமேரூர் : சாத்தணஞ்சேரியில், பழுதடைந்த பழமையான பச்சையம்மன் கோவிலில், அப்பகுதிவாசிகளின் முயற்சியால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பச்சையம்மன் கோவில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தணஞ்சேரி கிராமத்தில், பாலாற்றங்கரை ஓரத்தில், கிராமத்திற்கு சொந்தமான சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய, பச்சையம்மன் கோவில் உள்ளது. ஆற்றங்கரை ஓரத்தில் இக்கோவில் அமைந்துள்ளதால், ஆற்றங்கரை அம்மன் எனவும் இக்கோவில் பெயர் பெற்றுள்ளது. ஆண்டுதோறும், ஆவணி மாதம் வெகு சிறப்பாக இக்கோவிலுக்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அப்போது, இப்பகுதியை சுற்றிலும் உள்ள பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டு, பிரார்த்தனை மற்றும் தீ மிதித்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாதுகாக்க தீர்மானம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இக்கோவிலின் கருவறை மற்றும் கோவில் கோபுரம் ஆகியவை மிகவும் பழுதடைந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தன. இதனை தொடர்ந்து, இப்பகுதிவாசிகள் கோவிலை பராமரித்து, பாதுகாக்க தீர்மானித்தனர். அதன் தொடர்ச்சியாக, சுற்றிலும் உள்ள பக்தர்களிடையே நன்கொடை வசூலித்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவில் சீரமைப்பு பணி, கிராமவாசிகள் சார்பில் துவங்கப்பட்டு, தொடர்ந்து திருப்பணிகள் நடந்து வருகின்றன.