பதிவு செய்த நாள்
23
செப்
2014
12:09
புதுடில்லி:கங்கை நதியை தூய்மைப்படுத்தும் பணி நிறைவடைய, 18 ஆண்டுகள் ஆகும்’ என, மத்திய அரசு தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கங்கையை தூய்மைப்படுத்தும் பணியை, பல கட்டங்களாக மேற்கொள்ள வேண்டியுள்ளது; இது ஒரு நீண்ட கால நடவடிக்கை. முதல் கட்டமாக, கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள, 118 நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தூய்மைப்படுத்தும் பணி, இங்கு முதலில் முடிக்கப்படும். ஒட்டு மொத்தமாக, இந்த பணியை முடிக்க, 18 ஆண்டுகள் ஆகும். மேலும், ஏராளமான முதலீடும் தேவைப்படும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.