பதிவு செய்த நாள்
23
செப்
2014
12:09
புதுச்சேரி : அமெரிக்காவை சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள், புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு இன்ஸ்ட்டியூட்டில், சிலைகள் குறித்த ஆவணங்களை சோதனை செய்தனர். தமிழகத்தின் அரியலுார் மாவட்டம், சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான் கோவில்களில் இருந்த 28 ஐம்பொன் சிலைகள் உட்பட, பல முக்கியமான கோவில்களில் விலை உயர்ந்த சிலைகள் திருடு போயின.சிலை திருட்டு தொடர்பாக, அமெரிக்காவில் அருங்காட்சியகம் நடத்தி வந்த, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் சந்திரகபூர் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு, ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவில் அர்த்தநாரீஸ்வரர் சிலை, அரியலுார் மாவட்டம், சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான் கோவில் நடராஜர் சிலை, சுபாஷ் சந்திர கபூர் மூலம் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இவை, ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்டன.
சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான் கோவிலில் திருடப்பட்ட 28 ஐம்பொன் சிலைகளில் பல, அமெரிக்காவிலுள்ள அருங்காட்சியகத்தில் இருந்ததை, அந்நாட்டை சேர்ந்த ஹோம் லேண்ட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன் குழுவினர் கண்டுபிடித்தனர்.அதையடுத்து, அக் குழுவை சேர்ந்த புலனாய்வு அதிகாரிகள் ஜான்பால் லபார்டு, பிரென்ட்டன் ஈஸ்டர், டில்லி அமெரிக்க துாதரகத்திலுள்ள இன்வெஸ்டிகேட்டர் ரங்கராஜன் கோபால் ஆகியோர் நேற்று காலை புதுச்சேரியிலுள்ள பிரெஞ்சு இன்ஸ்ட்டியூட்டிற்கு வந்து, ஆய்வு மேற்கொண்டனர்.பிரெஞ்சு இன்ஸ்ட்டியூட்டில், தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற கோவில்களின் சிலைகள், கோபுரங்கள் புகைப்பட வடிவில் ஆவணமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.புலனாய்வு அதிகாரிகள், அமெரிக்காவில் கைப்பற்றப்பட்ட சிலைகளின் படங்களை வைத்து, பிரெஞ்சு இன்ஸ்ட்டியூட்டிலுள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, பிரெஞ்சு இன்ஸ்ட்டியூட் இயக்குனர் பியர் கிரார், ஆராய்ச்சியாளர் முருகேசன், புகைப்பட நிபுணர் ரமேஷ் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.ஏற்கனவே, சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் கடத்திய சிலைகள் குறித்து, தமிழகத்திலுள்ள சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு, பிரெஞ்சு இன்ஸ்ட்டியூட் நிறுவனம் பெரிய அளவில் உதவி செய்தது குறிப்பிடத் தக்கது.