நாகர்கோவில்: நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனியை மாநில எல்லையான களியக்காவிளையில் கேரள கவர்னர் சதாசிவம் வரவேற்றார். இந்த விழாவில் தமிழக அரசு பிரதிநிதியாக குமரி மாவட்ட தேவசம்போர்டு இணை ஆணையர் மட்டுமே கலந்து கொண்டார். வரும் 24-ம் தேதி நவராத்திரி விழா தொடங்க உள்ளதை ஒட்டி நேற்று முன்தினம் பத்மனாபபுரத்திலிருந்து பவனி புறப்பட்டது. நேற்று காலை மாநில எல்லையான களியக்காவிளைக்கு இந்த பவனி வந்த போது, அங்கு கேரள போலீசார் அணிவகுப்பு மரியாதை நடத்தி வரவேற்றனர். கேரள மாநில கவர்னர் சதாசிவம் தனது மனைவியுடன் வந்து பவனியை வரவேற்றார். சரஸ்வதிதேவிக்கு தட்டில் பூ, பழம் வைத்து கொடுத்த கவர்னர் பின்னர் குமரி மாவட்ட தேவசம்போர்டு சார்பில் தட்டில் கொடுத்த பிரசாதத்தை பெற்றுக்கொண்டார்.இதில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த பவனி இன்று இரவு திருவனந்தபுரம் சென்றடையும். பத்மனாபசுவாமி கோயில் எதிரில் திருவிதாங்கூர் மன்னர் பிரதிநிதி ஊர்வலத்தை வரவேற்று அழைத்து செல்வார்.