பதிவு செய்த நாள்
24
செப்
2014
01:09
ஈரோடு: நூறு ஆண்டு பழமை வாய்ந்த தேரின் சக்கரங்களை மாற்றி, இரும்பினால் ஆன சக்கரம் பொருத்தப்படுகிறது. ஈரோடு, கருங்கல்பாளையத்தில், நூற்றாண்டு பழமை வாய்ந்த சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு, நூறு ஆண்டுக்கு முந்தைய பழமை வாய்ந்த தேர் உள்ளது. தேரை பாதுகாக்க தனி அறையும் உள்ளது. தேர் சக்கரங்கள் மரத்தினால் ஆனவை. கால மூப்பின் காரணமாக, தேர் சக்கரங்களில் பழுது ஏற்பட்டது. விழாக்குழுவினர் தேர் சக்கரத்தை மாற்ற முடிவு செய்தனர். இதன்படி, இரும்பினால் ஆன சக்கரத்தை பொருத்த முடிவு செய்தனர். நான்கு சக்கரம், இரண்டு ஆக்சில் இரும்பால் செய்ய, திருச்சி பெல் நிறுவனத்துக்கு, ஆர்டர் கொடுக்கப்பட்டது. இரண்டு லட்சம் மதிப்பில் சக்கரம், ஆக்சில் செய்யப்பட்டன. நான்கு டயா மீட்டர் சுற்றில், சக்கரம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது, மர சக்கரங்களை அகற்றி விட்டு, இரும்பினால் ஆன சக்கரங்களை பொருத்தும் பணி துவங்கியுள்ளது. இப்பணிகள் ஓரிரு தினங்களுக்கும் நிறைவு பெறும். இதற்காக பக்தர்களிடமோ, பிற வகைகளிலோ, வசூல் செய்யவில்லை. மாறாக விழாக்குழுவினர் புதிய சக்கரத்துக்காக செலவு செய்துள்ளனர். பணிகள் ஓரிரு தினங்களுக்குள் நிறைவு பெறும். வெள்ளிக்கிழமை காலை, ஏழு மணிக்கு தேர் வெள்ளோட்டம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம், விழா காலங்களில் தேர் செல்லும் வழிகளில், வெள்ளோட்டம் பார்க்கப்படும். அதன் பின் வழக்கம் போல், டிசம்பரில் கோவில் விழா நடக்கும் போது தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். மரத்தேர் சக்கரத்துக்கு பதில், இரும்பினால் ஆன தேர் சக்கரம் செய்யப்பட்டு, இருப்பது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.