பதிவு செய்த நாள்
25
செப்
2014
11:09
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தசரா திருவிழா: தமிழகத்தில் தசரா திருவிழாக்களில் குலசேகரப்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலில் சிறப்பாக நடக்கும். மைசூரு தசரா திருவிழாவிற்கு அடுத்தபடியாக இங்கு தான் தசரா திருவிழா பக்தர்கள் மாறு வேடம் பூண்டு, காணிக்கை பிரித்து கோயிலில் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இந் நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.கொடியேற்றம்: நேற்று முன் தினம் மாலை அம்மனுக்கு காளி பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்ட வீதியுலா நடந்தது. 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக , ஆராதணைகள் நடந்தது. 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிக்கம்பத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடந்தது.பகல் ஒரு மணி, மாலை 5.30, 6.30, 7.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 9 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை அல்ஙகாரத்தில் வீதியுலா நடந்தது.
வீதியுலா: விழா நாட்களில் அம்மனுக்கு காலை 5மணிமுதல் இரவு 7.30 மணிவரை சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடக்கும். இரவு 9 மணிக்கு அம்மன் ஒவ்வொரு திருக்கோலத்தில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கும். இதில் தென் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மாறு வேடங்கள் அணிந்து கோயிலுக்கு காணிக்கை வசூலித்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவார்கள்.
மகிஷாசுர வதம்: அக்., 3 ம் தேதி அம்மனுக்கு காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 10.30 மணிக்கு மஹா அபிஷேகம் நடக்கும். இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜை அலங்காரத்துடன், அம்மன் சிம்ம வாகனத்தில்,குலசேகரப்பட்டிணம் கடற்கரையில் எழுந்தருளுவார். இரவு 12 மணிக்கு மகிஷா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து அம்மன் அருள் பெற்று செல்வார்கள். இதற்கான அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்பு, உதவி கமிஷனர் செல்லத்துரை, நிர்வாக அதிகாரி கணேசன் செய்து வருகின்றனர்.