பதிவு செய்த நாள்
29
செப்
2014
02:09
மேட்டுப்பாளையம் : காரமடை அங்கநாதர் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பெருமாளை வழிபட்டனர். கோவை மாவட்டம், காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி சனிக்கிழமை விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவை முன்னிட்டு, அதிகாலை 3.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பெருமாளுக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. அதன் பின் உற்சவ அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று, மூலவர் அரங்கநாதப் பெருமாளையும், உற்சவ மூர்த்தியையும் வழிபட்டனர். பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கறிகளை, கோவில் வளாகத்தில் உள்ள தாசர்களுக்கு படையலிட்டனர். பின், தாசர்களிடம் இருந்து சிறிதளவு பெற்றுச் சென்றனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.