பதிவு செய்த நாள்
30
செப்
2014
12:09
கரூர்: கரூர் தான்தோணி கோவிலில் சங்கு ஊதும் தாதர்கள், தங்குவதற்கு மண்டபம் கட்ட வேண்டும், என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரூர், தான்தோணிமலையில் கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவில் உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, ஸ்வாமி வழிபாடு செய்கின்றனர். கோவில் வளாகப்பகுதியில் ஏராளமான தாதர்கள், சங்கு ஊதி ஸ்வாமிக்கு சேவை செய்து வருகின்றனர். வெளியூரில் இருந்து வரும், தாதர்கள், தங்க மண்டபம் கட்ட வேண்டும், என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அறநிலைத்துறை, கோவில் சார்பில் எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. மண்டபம் கட்ட வேண்டும், என, 30க்கும் மேற்பட்ட தாதர்கள், சங்கு ஊதியவாறு, மனு நீதி முகாமில் மனு அளித்தனர். தாதர்கள் சங்க தலைவர் மயில்வேல், கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட தாதர்கள் உள்ளோம். கல்யாண வெங்கடரமண ஸ்வாமிக்கு, முன்னோர் காலத்தில் இருந்து, சங்கு ஊதி சேவை செய்து வருகிறோம். புரட்டாசி மாதத்தில், அனைத்து நாட்களிலும் இரவு, பகலாக ஸ்வாமிக்கு சங்கு ஊதி சேவை, செய்ய வேண்டி உள்ளது. நாங்கள் தங்குவதற்கு இடமும் இல்லை, மடமும் இல்லை. மண்டபம் கட்டி தர வேண்டும். பக்தர்கள் கொடுக்கும் அரிசி, பருப்பு மற்றும் தானியங்களை வாங்க கூடாது, என மிரட்டப்படுகிறது. எங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.