பதிவு செய்த நாள்
06
அக்
2014
12:10
கும்பகோணம்: ஒப்பிலியப்பன்கோவிலில், புட்டாசி பிரமோத்சவ விழா, சிரவண வழிபாடு நிகழ்ச்சிகளில், ஆயிரக்கணக்கானோர் ஸ்வாமி தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக திருப்பதி, திருவிண்ணகர், பூலோக வைகுந்தம் என்றெல்லாம் போற்றப்படும் ஒப்பிலியப்பன் கோவில் வேங்கடாசலபதி ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி பிரம்மோத்சவ விழா கடந்த மாதம், 26ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழா நாட்களில், தினமும் காலை பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் பெருமாள், தாயார் வீதியுலா நடந்தது. 29ம் தேதி கருடசேவை நிகழ்ச்சி நடந்தது. 4ம் தேதி, கோரத உற்சவம் நடந்தது. புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை என்பதால் அதிகாலை, 3.40 மணிக்கு சுப்ரபாதமும், 4 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் நடைபெற்றது. மூலவருக்கு புஷ்பங்கி சேவை சாத்தப்பட்டிருந்தது. தொடர்ந்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று பெருமாளை தரிசனம் செய்தனர். திருமண மண்டபத்தில் உற்சவர் என்னப்பன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு புஷ்பலங்காரத்தில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். உற்சவர் பொன்னப்பன், பூமிதேவி சிறப்பு புஷ்பலங்காரத்தில் கோரத வீதியுலா நடைபெற்றது. பின், உற்சவருக்கு திருவடி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் பரணீதரன் மற்றும் ஆலயப்பணியாளர்கள் செய்தனர்.