பதிவு செய்த நாள்
06
அக்
2014
12:10
கும்பகோணம்: கும்பகோணத்தில் விஜயதசமியை முன்னிட்டு, 30 கோவில்களின் ஸ்வாமிகள் ஒரு சேர அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.புரட்டாசி அமாவாசை தினத்தன்று நடைபெறும் நவராத்திரி திரு விழா கடந்த மாதம், 24ம் தேதி தொடங்கியது. கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர்சுவாமி, வியாழசோமேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர், ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர், காளஹஸ்தீஸ்வரர் உள்ளிட்ட, 12 சிவாலயங்களிலும் நவராத்திரி விழா தொடங்கியது. மறுநாள் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமஸ்வாமி, ஆதிவராக பெருமாள், மேலக்காவேரி வரதராஜபெருமாள், வேதநாராயணபெருமாள், வரதராஜபெருமாள் கோவில் உள்ளிட்ட 9 வைணவ தலங்களிலும் நவராத்திரி திருவிழா கடந்த, 25ம் தேதி தொடங்கியது.மகிசாசுரன் என்ற அரக்கனை, விஜயதசமி நாளன்று பார்வதி தேவி அம்பு எய்தி அழித்ததாக புராணம்.நவராத்திரியின் நிறைவு நாளன்று இரவு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, ஆதிகும்பேசுவர ஸ்வாமி, காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், சாரங்கபாணி பெருமாள், சக்கரபாணி பெருமாள், ராமஸ்வாமி, ஆதிவராஹர், வரதராஜப்பெருமாள் கோவில் உள்பட பல கோவில்களின் ஸ்வாமிகள் ஒருங்கிணைந்து கும்பகோணம் ரயில்வே சாலையில், சென்று தீயதிகளை அழிக்கும் விதமாக அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.இதில், திரளானோர் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்பாளை வழிபட்டனர்.விஜயதசமி தினத்தன்று மட்டும் அனைத்து சிவன் கோவில்கள் மற்றும் பெருமாள்கோவில்களின் உற்சவ மூர்த்திகள் ஒரே இடத்தில் எழுந்தருளி அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.