ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஜக்கம்பட்டி நன்மைதருவார் கோயிலில் சப்தரிஷிகளுடன் குருபகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. ஆண்டிபட்டியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் சிவன் கோயிலுடன் இணைந்த தட்சணாமூர்த்தி சிலைகள் உள் ளன. குருபகவானுக்கு தனியாக சிலை பிரதிஷ்டை இல்லை. தற்போது நன்மை தருவார் கோயிலில் குருபகவானுக்கு 8 அடி உயரத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது.இக்கோயில் வளாகத்தில் ஏற்கனவே ஐயப்ப சுவாமிக்கு கோயிலும், 49 அடி உயர மாகாளி சிலையும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.தற்போது சப்த ரிஷிகளான கசியப்பர், அக்ரிமுனி, விசுவாமித்திரர், கவுதமர், வசிஷ்டமுனி ஆகியோர் சுற்றி அமர்ந்த நிலையில் குருபகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. பிரதிஷ்டை பணிகளை விரைவில் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த இருப்பதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.