பதிவு செய்த நாள்
07
அக்
2014
01:10
பொள்ளாச்சி: முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் நேற்று பொள்ளாச்சி பகுதியில் கொண்டாடப்பட்டது. தியாகத்திருநாள் என அழைக்கப்டும் பக்ரீத் பண்டிகைக்காக, பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை, மதியம் தடபுடல் விருந்துடன் பொள்ளாச்சி பகுதி முஸ்லிம்கள் கொண்டாடினர். இதையொட்டி, பொள்ளாச்சி உடுமலை ரோடு பெரிய பள்ளிவாசல், மார்க்கெட் ரோடு பள்ளிவாசல், பல்லடம் ரோடு பள்ளிவாசல், குமரன்நகர் உள்ளிட்ட அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்புத்தொழுகை நடந்தது. மேலும், மதியம் வீடுகளில் முஸ்லிம்களின் சிறப்பு உணவான பிரியாணியுடன் தடபுடல் விருந்து நடைபெற்றது. இதற்கு பிற மத நண்பர்கள், பக்கத்து வீட்டினரை அழைத்து முஸ்லிம்கள் விருந்து கொடுத்தனர்.
வால்பாறை: வால்பாறையில் பக்ரீத் பண்டிகையையொட்டி, பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நேற்று வால்பாறையில் கொண்டாடப்பட்டது. பண்டிகையொட்டி வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளிவாசல், சோலையாறு எஸ்டேட், உருளிக்கல், சின்கோனா, சோலையார்டேம், அட்டகட்டி உள்ளிட்ட மசூதிகளில் காலை 10.00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.