ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான் அம்பிகையை விட்டு மாயமாய் மறைந்தார். தனியாய் தவித்த உமையவள், அருகிலிருந்த மரத்தில் கண்ணைப் பறிக்கும் ஒளியைக் கண்டார். ஒளி வந்த இடத்தில் உடும்பு ஒன்று இருந்தது. அதன் உடல் பொன்னிறமாக இருந்தது. வைடூரிய முகம், இந்திரநீலக் கண்கள், முத்துப்போல் பற்கள், பவளநிற பாதங்கள், வச்சிர நகங்கள், புஷ்பராகம் போன்ற வயிறு, கோமேதக வண்ணத்தில் முதுகு, மரகதமாய் மின்னும் வால் இப்படி பலவிதமான ஒளிகளுடன் வினோதமாக விளங்கியது. சிவனே இப்படி உடும்பாய் மாறியிருந்ததுஉமையவளுக்குப் புரியவில்லை. அவள் அந்த அதிசய உடும்பினைப் பிடிக்க முயற்சித்தாள். அது தப்பி ஓடியது.இறுதியில் செண்பகவனம் என்றகாட்டிலுள்ள மலையில் ஏறியது. அங்கு தவம் செய்த முத்கலர், உச்சாயினர் என்ற முனிவர்கள் உடும்பின் அழகில் தம்மைப் பறிகொடுத்து பின்னே சென்றனர்.மலையேறிய உடும்பு லிங்கமாக மாறியது. அம்பிகை, அவளது தோழிகள்,முனிவர்கள் ஆகியோர் அந்த லிங்கத்தைப் பூஜித்தனர். ஓசூரில் இந்த செண்பகவன மலை அமைந்துள்ளது. உடும்பாய் வந்த சிவன் மலைஉச்சியில் சந்திரசூடேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.