பதிவு செய்த நாள்
30
மே
2011
03:05
இன்றும் சித்தர்கள் உலகில் இருக்கிறார்கள்; ஆனால், அவர்கள் மனிதர்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை என்கிறார்கள். ஒரு ஞானி இதற்கொரு கதை சொல்கிறார். ஒரு துறவி தம்முடைய சில சீடர்களுடன் ஒரு நகரத்திற்கு வந்திருந்தார். அந்தத் துறவிக்கு ஒரு சக்தி இருந்தது. தம் உடலிலிருந்து ஒரு துளி ரத்தம் எடுத்து, அதன்மூலம் குழந்தைகளின் நோய்களை உடனுக்குடன் குணப்படுத்தும் ஆற்றல் அது. இந்த செய்தி மெல்ல மெல்ல நகரம் முழுவதும் பரவிவிட்டது. தமக்கு தேவியின் அருள் கிட்டியிருப்பதாகவும் அந்த சித்தியின் மூலம் தான் தம்முடைய ரத்தத்தில் மருந்துக்குணம் இருப்பதாகவும் துறவி தெரிவித்தார். அன்று முதல், துறவியின் இருப்பிடத்தில் பொன், வெள்ளிக்காசுகளும் பழங்களும் மலர்களும் பூஜைக்கான பொருள்களும் வந்து குவியலாயின. ஏகப்பட்ட பெற்றோர்கள், நோய்வாய்ப்பட்ட தமது குழந்தைகளுடன் துறவியின் ஆசிரமத்தை முற்றுகையிடலானார்கள். நோயால் வருந்திய சின்னஞ்சிறு குழந்தைகளின் திரளான கூட்டத்தைக் கண்ட துறவியின் மனதில் கருணை பொங்கித் ததும்பியது.
மறுகணமே துறவி தம் ஆள்காட்டி விரலொன்றைத் திரிசூலத்தில் அழுத்தினார். குபுகுபுவென்று ரத்தம் வெளிப்பட்டது. ரத்தத் துளிகளின் மகிமையால் குழந்தைகளின் நிலைமையில் அப்போதே முன்னேற்றம் ஏற்பட்டது. பெற்றோர்களின் முகத்தில் வியப்பும் மகிழ்ச்சியும் பொங்கியது. ஒரு விரலில் ரத்தம் வருவது நின்றதும், துறவி தமது இன்னொரு விரலைத் திரிசூலத்தின் மேல் வைத்தார். குணமடைந்த நோயாளிகளின் கூட்டம் அங்கிருந்து மெல்ல மெல்ல நகர்ந்தது. ஆனால், நோயாளிகளின் வரிசை வளர்ந்து கொண்டே போயிற்று. துறவியின் பத்து விரல்களிலிருந்தும் ரத்தம் வெளியேறி முடிந்தாயிற்று. அதற்கு மேல் ரத்தம் நின்று விட்டது. ஆயினும், நோயாளிகளின் வருகைக்கு ஒரு முடிவு இருப்பதாகவே தெரியவில்லை. அக்கம் பக்கத்து ஊரின் மக்களும் அங்கே வரத் தொடங்கி விட்டார்கள். கதையை விவரிப்பானேன்? காரணம், கடைசி கட்டம் முழுக் கதையையும் விளக்கி விடுகிறது. அகதிகள் சிலர் இந்த விவரம் தங்களுக்கு எட்டியதும் அந்தத் துறவியின் குடிசைக்கு விரைந்தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி - ஐயகோ!
கால்கள் ஒரு மரக்கிளையில் கட்டப்பட்டு துறவி தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார். திரிசூலத்தால் குத்தப்பட்டு உடல் முழுவதும் சல்லடைக் கண்களாகி வெளுத்துப் போய் விட்டிருக்கிறது. துறவியின் அருகில், கையில் ஒரு நோயாளிக் குழந்தையுடன் நின்ற ஒரு தம்பதியர் சுவாமி! ஒரு துளி ரத்தம் மட்டும் எங்களுக்குத் தாருங்கள். எங்களுடைய ஒரே குழந்தை இது. தங்கள் சாந்நித்தியத்திலிருந்து நம்பிக்கை இழந்து திரும்ப வேண்டிய அளவுக்கு எங்களுக்கு மட்டும் ஏன் இந்தத் துர்பாக்கியம்? என்று மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மனிதர்கள், அந்த நகரத்தின் அந்நாளைய மனிதர்களிலிருந்து வேறுபட்டுவிட்டனரா? இல்லை! என்பதுதான், மனிதனின் இயற்கை குணங்களை ஆராய்ந்தறிந்த உளவியல் அறிஞர்களின் கூற்று! இந்த சம்பவத்துக்குப் பிறகு இறைவனும் இறைவியும் கொஞ்சம் உஷாராகி விட்டனர். இந்தத் துறவியைப் போன்ற வரம் பெற்ற சித்தர்கள் இன்றுகூட இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் இப்படி வெளிப்படையாக மனிதர்களிடையே செல்வதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.