ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் மாவட்டம் சித்லகட்டாவின் ராமேனஹள்ளியில் உள்ளது ஒடேயனகெரே ஏரி. இந்த ஏரியில் தான், 1,500 ஆண்டுகளாக, சயன கோலத்தில், விஷ்ணு அருள்பாலித்து வருகிறார். புராணங்களின்படி, 1,500 ஆண்டுகளுக்கு முன், ஒடேயனகெரேயில், அனந்த பத்மநாபர் கோவில் கட்டப்பட்டது. காலப்போக்கில், கோவில் பகுதி முழுதும் தண்ணீர் சூழ்ந்து ஏரியாக மாறியது.
இந்த நீரையே பக்தர்கள் தங்கள் வீட்டு குடிநீருக்கு பயன்படுத்தி வந்தனர். கோடைகாலத்தில் கோவிலின் பாதி கருவறை தென்படும். அப்போது பக்தர்கள், ஏரிக்கரையில் நின்றபடி தரிசிப்பர். இந்த ஏரி, விஷ்ணுவால் ஆசிர்வதிக்கப்பட்டது என, பக்தர்கள் நம்புகின்றனர். ஒடேயனகெரே ஏரியை புனித குளம் என்றும் நம்புகின்றனர். கருவறையில், ஆதிசேஷன் மீது, சாய்ந்தபடி அனந்த பத்மநாபர் கோலத்தில் விஷ்ணு அருள்பாலிக்கிறார். அவரை வழிபடுவதால் குடும்ப வாழ்க்கையில் பாதுகாப்பு, செழிப்பு, நல்லிணக்கம் அதிகரிக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். சுவாமியின் ஆசியை பெற, சதுர்த்தசி அன்று புனித கயிற்றை கையில் கட்டிக் கொள்கின்றனர்.
கோவில் முழுதும் ஏரியில் மூழ்கியிருப்பதால், இக்கோவில் தனித்துவமானதாக கருதப்படுகிறது. சுயம்புவாக தோன்றிய கருவறை, 40 முதல் 50 அடிக்கு கீழ் இருப்பதாக நம்புகின்றனர். முந்தைய கோபுரமும், 10 அடி நீரில் உள்ளது. தற்போது சிறிதாக தெரியும் கோபுரத்தின் மேல் பகுதியில், பக்தர்கள் எளிதாக வந்து வழிபடும் வகையில், கரையில் இருந்து படிக்கட்டுகளுடன் மேடை அமைத்து உள்ளனர்.