நிமிடத்தில் வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்த அம்மன் கோவில்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2026 10:01
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்த மூன்று அம்மன் கோவில்கள் உள்ளன. அவை பற்றி இக்கட்டுரையில் காண்போம். கொல்லுார் மூகாம்பிகை உடுப்பி மாவட்டத்தில் உள்ளது கொல்லுார் மூகாம்பிகை அம்மன் கோவில். வரலாற்று பிரசித்த பெற்ற இக்கோவிலின் பிரதான தெய்வம் மூகாம்பிகை அம்மன்.
ஞானம், கல்வி, கலை மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தை அருளும் அம்மனாக திகழ்கிறார். ஆதிசங்கரர் இந்த தலத்தில் ஸ்ரீசக்கரத்தை நிறுவி வழிபட்டதாக ஸ்தல புராணம் கூறுகிறது. இந்த அம்மனை வழிபட்டால், வாழ்க்கையில் சகல பாக்கியங்களும் கிடைக்கும். நிமிடத்தில் வாழ்க்கையையே மாற்றும் சக்தி இந்த அம்மனுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
சாமுண்டீஸ்வரி அம்மன் மைசூரு மாவட்டம் சாமுண்டீ மலை உச்சியில் உள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில். இது, மைசூரு அரச குடும்பத்தினர் வழிபட்ட கோவிலாகும். மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. திராவிட கட்டடகலையை பிரதிபலிக்கிறது. மைசூரின் தெய்வம் என்றே சாமுண்டீஸ்வரியை பக்தர்கள் அழைக்கின்றனர். இங்கு மிகப்பெரிய நந்தி சிலை பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும். சக்தி வாய்ந்த சாமுண்டி அம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும். மகிஷாசூரனை வதம் செய்து விட்டு, பக்தர்களுக்கு அருள் தருகிறார்.
அன்னபூர்னேஸ்வரி கோவில் சிக்கமகளூரு மாவட்டம் ஹொரநாட்டில் உள்ளது ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில். இது, உணவு தெய்வமான அன்னபூர்னேஸ்வரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இங்கு வரும் பக்தர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. இங்கு வருவோர் யாரும், பசியோடு திரும்பியதாக வரலாறு இல்லை. அம்பாளை வழிபட்டால் பலரின் பசியை போக்கும் அளவுக்கு செல்வம் செழிக்கும். ஆடை கட்டுப்பாடு உண்டு. அம்பாளை வழிபட்டால் வாழ்வில் உணவு பற்றாக்குறை ஏற்படாது. வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்த அம்பாள் என்றும், பக்தர்கள் கூறுவதை கேட்க முடியும். மேற்குறிப்பிட்ட மூன்று கோவில்களும் மாநிலம் தாண்டி பிரசித்தி பெற்றவை. இந்த கோவில்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.