காட்டுமன்னார்கோவில் : கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளும்போது கிடைத்த சிவலிங்கத்திற்கு, பொதுமக்கள் பூஜை செய்தனர். கடலூர் மாவட்டம், ஓமாம்புலியூர் கொள்ளிடம் ஆறு மணல் குவாரியில், நேற்று காலை, 6:30 மணியளவில், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவர், பொக்லைன் மூலம் மண் அள்ளிக் கொண்டிருந்தார். அப்போது, 3.5 அடி உயரமும், 100 கிலோ எடையுள்ள சிவலிங்கம் இருந்தது கண்டுடெடுக்கப்பட்டது. சிவலிங்கம் கிடைத்த தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள், அதே இடத்தில் சிவலிங்கத்தை வைத்து, அபிஷேகம் செய்து தரிசித்தனர். வியாக்ரபுரீஸ்வரர் கோவில் தர்மகர்த்தா, வருவாய் துறையினர் மற்றும் போலீசார், சிவலிங்கத்தைக் கைப்பற்றி காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.