பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2014 01:10
பெரியகுளம் :பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்த சஷ்டிவிழா நேற்று மூலவருக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கியது. பாலசுப்பிரமணியசுவாமி கோயில் சைவம் வளர்த்த தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில். கோயிலில் கட்டட அமைப்பில் எந்த கோயிலிலும் இல்லாதபடி சுப்பிரமணியர் (முருகன்), ராஜேந்திரசோழீஸ்வரர் (சிவன்), அறம்வளர்த்த நாயகி (அம்பாள்) ஆகிய மூன்று சந்நிதிகளும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. ஒவ்வொரு சந்நிதிக்கும் ஒரு கொடிமரமாக மூன்று கொடி மரங்கள் உள்ளன. இவைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் விரதம்: பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பக்தர்கள் நேற்று முதல் ஆறுநாட்கள் விரதம் மேற்கொண்டுள்ளனர். இவர்களில் பெண் பக்தர்கள் அதிகளவில் உள்ளனர். கந்த சஷ்டி நாட்களில் விரதம் மேற்கொள்வது, குடும்பத்தில் சகல ஐஸ்வர்யம் கிடைக்கும் என்பது ஐதீகம். பக்தர்கள் விரதம் நாட்களில் பழங்களை மட்டும் சாப்பிட்டு தினமும் கந்த சஷ்டி கவசத்தை வாசிப்பர். இவர்களில் பலர் திருச்செந்தூர், பழநி, திருப்பரக்குன்றம், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் அக்.,29ல் நடக்கும் சூரசம்ஹாரத்தை கண்டு மகிழ்வர். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் ஏழு நாட்களிலும் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். முக்கிய விழாவான 6ம் நாள் சூரசம்ஹாரமும், அக்.,30ல் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கும். ஏற்பாடுகளை கோயில்நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.