பதிவு செய்த நாள்
02
ஜூன்
2011
12:06
மாணவர்கள் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள். பத்தாம் வகுப்பு முடித்தவர்களோ, பிளஸ் டூவில் எந்த குரூப் எடுத்து படித்தால் நல்லது என்பதைப்பற்றியும், பிளஸ் டூ முடித்தவர்களோ, எந்த காலேஜில் என்ன கோர்ஸ் சேர்வது என்பதை பற்றியும், காலேஜ் முடித்தவர்கள் மாஸ்டர் டிகிரி பண்ணுவது பற்றியும் ஒரே குழப்பத்தில் இருப்பார்கள். இப்படிப்பட்ட குழப்பம் எல்லாம் நீங்கி இறைவன் அருளாலும் கோள்களின் துணையுடனும் மாணவர்கள் தாங்கள் வேண்டியது கிடைக்க பொதுவாக மதுரை மீனாட்சியை வழிபடுவது சிறப்பு. ஏனெனில் மதுரை மீனாட்சி நவக்கிரக நாயகியாகவும், ஞானத்தை தரக்கூடிய சுகப்பிரம்ம மகரிஷியை கிளி வடிவில் வலது கையில் ஏந்திய நிலையிலும் அருள்பாலிப்பது தான் இந்த சிறப்புக்கு காரணம். இருந்தாலும் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு நட்சத்திரம் இருக்கும். அந்தந்த நட்சத்திரத்தை சேர்ந்த மாணவர்களுக்குரிய பொதுவான குணமும், அந்த நட்சத்திரத்தை சேர்ந்த மாணவர்கள் எப்படி வழிபாடு செய்தால் விரும்பியது கிடைக்கும் என்பது பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் விட தன்னம்பிக்கை, விடாமுயற்சி, இறைபக்தி இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே ஒரு மாணவர் மாபெரும் வெற்றியை அடைய முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையும் தைரியமும் மிக்கவர்கள்.
கேது திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சுக்ர திசை வரை நீடிக்கும். இயல்பாகவே எதையும் எளிதாக புரிந்துகொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. அதேசமயம் சோம்பல் தனத்தால் எதையும் தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்தால் பெரும் சாதனைகள் புரியலாம். தனிமை விரும்பியான நீங்கள், யாரிடமாவது நட்பு கொள்ளும் முன் யோசித்து மிகவும் கவனத்துடன் பழகுவது நலம். வெளிநாட்டுக் கல்வி, கல்விக்கடன் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு முன்பாக, அருகிலுள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வணங்கிவிட்டு தொடங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும். மனம் ஒருநிலைப்பட்டு செய்யும் செயல்களில் தான் வெற்றி நிச்சயம். எனவே சங்கீதம், ஓவியம், விளையாட்டு என ஏதேனும் ஒரு கலையை பழகுவதோடு தினமும் உடலுக்கும் மனதுக்கும் பயிற்சி கொடுத்தால் உங்கள் மனம் ஒருநிலைப்படும். பிறர் பாராட்டை விரும்பும் நீங்கள், அடுத்தவரின் தவறை நாசூக்காக சுட்டிக்காட்ட வேண்டும்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் 5 அகல் தீபங்களை ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அருகில் உள்ள கோயில்களில் உள்ள நவகிரகசன்னதிக்கு சென்று சூரியனை வழிபடுவதும் நல்லது. அடிக்கடி பிள்ளையார்பட்டி சென்று வருவது சிறப்பான நற்பலன் தரும். மாணவர்கள் அந்தந்த ஆண்டு முடியும் போது திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரøயும் பொங்கு சனியையும் வழிபட்டால் தடங்கல்கள் நீங்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.
சுக்ரதிசையில் தொடங்கிய உங்களின் மாணவப்பருவம் சூரியதிசை வரையிலும், சிலருக்கு சந்திர திசை வரையிலும் இருக்கலாம். எந்த ஒரு செயலையும் மனக்குழப்பமின்றி முழுமையான ஈடுபாட்டுடன் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படும். கல்விக்கடனுக்கான முயற்சிகள், வெளிநாட்டுக்கல்விக்கான முயற்சிகளில் கவனமாக ஈடுபட வேண்டும்.
யோகா, உடற்பயிற்சிகளை கற்றால் மனதை ஒருநிலைப்படுத்தலாம். நல்ல நண்பர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பழக வேண்டும். சட்டென உணர்ச்சி வசப்படும் சுபாவம் உள்ள நீங்கள் அதைப் போக்க தினமும் சில நிமிடமாவது தியானம் செய்வது நல்லது. வாகனப்பயணத்தில் வேகம் தவிர்ப்பதும் அவசியம். அஜீரணபாதிப்பு, எலும்புத்தேய்மானம், சளித்தொந்தரவுகளில் அலட்சியம் கூடாது.
ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45 வரை இஷ்டதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் அருள்பாலிக்கும் பள்ளி கொண்ட பெருமாளை தரிசனம் செய்து விட்டு ஆரம்பிக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது ஸ்ரீரங்கம் சென்று வருவது சிறந்த பலனைத் தரும். மாணவப் பருவம் முடியும் போது, திருநள்ளாறு சென்று சனிபகவானையும், தர்ப்பாரண்யேஸ்வரரையும் வழிபட்டால் பணிகள் அனைத்தும் செழிப்பாக அமையும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் திட்டமிட்டு திறமையாக செயல்படக்கூடியவர்கள்.
சூரியதிசையில் ஆரம்பித்த உங்களின் மாணவப்பருவம், செவ்வாய் திசை அல்லது ராகு திசை வரையிலும் இருக்கும். எதையும் யோசித்து, திட்டமிட்டு செயல்படக்கூடிய நீங்கள் பிடிவாதத்தையும், வீண் கோபத்தையும் தவிர்க்க வேண்டும்.பெற்றோர் மற்றும் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்க வேண்டும். யாரிடமாவது நட்பு கொள்ளும் முன் யோசித்து மிகவும் கவனத்துடன் பழகுவது நலம்.
அயல்நாடு சென்று படிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எளிதாகக் கைகூடும். வங்கிக்கடன்கள், உயர்கல்வி முயற்சிகளை பெற்றோர், பெரியோர் ஆலோசனைப்படி, செய்யுங்கள். சட்டென உணர்ச்சி வசப்படுவதும், வீண்பிடிவாதமும் உங்கள் உடன்பிறந்தவை என்றாலும், விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. ஏதாவது ஒரு செல்லப் பிராணியை வளர்ப்பதால் உங்கள் மனம் தானாகவே அமைதியாகும். காது, மூக்கு, தொண்டை, ஒற்றைத் தலைவலி பாதிப்புகளை உடனுக்குடன் கவனித்து சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்டதெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியையும் தொடங்கும் முன் ராகவேந்திரரை தரிசனம் செய்து தொடங்குங்கள். அடிக்கடி புதுச்சேரி அருகிலுள்ள பஞ்சவடி சென்று பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பான பலன் தரும். மாணவப் பருவம் முடிவடைந்ததும், குச்சனூர் சென்று சனிபகவானை தரிசித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் அமைதியான செயல்களால் ஆனந்தம் அடைவீர்கள்.
சந்திர திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகு திசை வரை தொடரும். எதிலும் பரபரப்பில்லாமல், பதட்டப்படாமல் நிதானமாக செயல்படக்கூடிய ஆற்றல் உடையவர்கள்.வீண் புகழ்ச்சிக்கு மயங்காமல் தன்னம்பிக்கையுடன் எதையும் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். நண்பர்களிடம் உங்கள் சொந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்போது மனக்குழப்பமின்றி இறைவனை வழிபட்டு விட்டு பின்னர் அதில் முயற்சி எடுக்க வேண்டும். ஆடம்பரம், கேளிக்கையில் உங்களுக்கு நாட்டம் இருந்தாலும் அதை தவிர்ப்பது நல்லது. நரம்பு உபாதைகள், சுவாசக் கோளாறுகளில் அலட்சியம் செய்யக்கூடாது.
ஒவ்வொரு திங்களும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபடுங்கள். அருகில் உள்ள நவகிரக சன்னதிக்கு சென்று சந்திரனை வழிபடுங்கள். புதிய முயற்சிகளின் போது, ராகவேந்திரரை வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரரை தரிசியுங்கள். பள்ளிப்பருவம் முடிந்ததும், திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை தரிசித்து விட்டு வந்தால் மனம் போல் வாழ்வு அமையும்.
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் விடாமுயற்சியும் துணிவும் மிக்கவர்கள்.
செவ்வாய் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகுதிசை வரை இருக்கும். எந்த செயலையும் துணிவுடன் செய்யக்கூடிய நீங்கள், பணிவுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். எதையும் நிதானமாக யோசித்து தீர்மானியுங்கள். அமைதியாக பேசுங்கள். தியானம், யோக பழகினால், மனதில் ஏற்படும் வீண் குழப்பங்கள் மறையும். உங்களது சிந்திக்கும் திறன் அதிகரிக்க உடலிலிருந்து நிறைய வியர்வை வெளியேறும் வகையில் உடற்பயிற்சி செய்யுங்கள். நேரடி முயற்சிகளால் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு கைகூடும்.
பழக்கத்திற்காக எதையும் செய்யாமல், பெற்றோர், ஆசிரியர் ஆலோசனைப்படி செய்யுங்கள். வெளிநாட்டில் கல்வி பயில விடா முயற்சி செய்தால் சிறந்த பலன் கிடைக்கும். வங்கிக்கடன் பெற நேர்வழியே நல்லது. விரைவில் தூங்கி அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. தேவையற்ற நட்பு வேண்டவே வேண்டாம். அலர்ஜி மற்றும் காயம் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்.
ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தற்கு விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுங்கள். புதிதாக எந்த செயல் தொடங்கினாலும் நவக்கிரகத்தில் உள்ள ராகுவை வழிபட்டு தொடங்குங்கள். அடிக்கடி நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் சென்று வழிபாடு நடத்துங்கள். பள்ளி வாழ்க்கை முடிந்ததும், திருச்செந்தூர் சென்று உரிய முறைப்படி முருகனை வழிபாடு செய்தால் தகுந்த வேலை கிடைத்து வாழ்வு நலமாகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள், எளிதில் எதையும் புரிந்துகொள்ளும் திறமை உடையவர்கள்.
ராகு திசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு திசை வரை தொடரும். படித்ததை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதும், அதை சரியான நேரத்தில் உபயோகப்படுத்துவதும் உங்களது தனி சிறப்பு. இந்த திறமையால் பிறருக்கு பாதிப்பு வராமல் நடந்தால் மதிப்பு உயரும். வீண்பிடிவாதம், அநாவசிய கோபத்தை தவிர்த்தால் வெற்றி எப்போதும் உங்கள் பக்கத்தில் இருக்கும். கோபப்படாமல், விட்டுக்கொடுக்கும் தன்மையை வளர்த்தால் சிறந்த நன்மை கிடைக்கும். உங்களது விருப்பம் போல் வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
நண்பர்களிடத்தில் உங்களுக்கு நல்லபெயர் இருந்தாலும், போலியான நட்பை தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட நோய், தொற்று நோய் ஆகியவற்றால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படலாம். இரவை தவிர்த்து அதிகாலையில் படிப்பது நல்லது.
ஒவ்வொரு செவ்வாயும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்திற்கு 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். அத்துடன் செவ்வாய் மாலை ராகு காலத்தில் நவக்கிரகத்தில் உள்ள ராகுவை வழிபடுங்கள். ஏதேனும் புதிதாக செய்
யும் முன் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி தஞ்சாவூர் கதிராமங்கலம் வனதுர்க்கையை வழிபாடு செய்யுங்கள். பள்ளி வாழ்க்கை முடிந்ததும், மாணவப் பருவம் நிறைவடைந்ததும், திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரøயும் பொங்கு சனியையும் வழிபட்டால் வாழ்வு நலம் பெறும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையும் தளராத முயற்சிகளும் உள்ளவர்கள்.
குருதிசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சனிதிசை வரை தொடரும். எதையும் உடனே புரிந்து கொள்ளும் ஆற்றல் உடைய நீங்கள், பலரால் பாராட்டப்பட்டாலும் அதனால் கர்வம் அடையாதவர்கள். எதையும் உடனே செய்யாமல் மிகவும் தாமதமாக செய்வதை தவிர்ப்பது நல்லது. எந்த செயலையும் சிறப்பாக செய்யும் நீங்கள், எதையும் திட்டமிட்டு சரியாக செய்தால் உடனடி பலன் கிடைக்கும். நண்பர்களிடத்தில் மிகவும் கவனமாக பழகவும்.
சிந்தித்து செயல்படக்கூடிய நீங்கள் குறுகிய வட்டத்திற்குள் இருக்க கூடாது. இது உங்கள் வெற்றிக்குத் தடையாக இருக்கும். சிறிது காலத்திற்கு புதிதாகப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதையும், கிணற்றுத் தவளையாக இருப்பதையும் தவிர்க்கவும். வெளிநாட்டில் பயிலும் வாய்ப்பு வந்தால் ஏற்பது நல்லது. உடலில் ஏற்படும் வியாதிகளுக்கு உடனடி சிகிச்சை எடுத்து கொள்ளவும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கவும்.
ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபட்டால் காரியத் தடங்கல்கள் நீங்கும். ஏதேனும் புதிய செயல்களில் ஈடுபடும் முன் அருகிலுள்ள மகானின் பிருந்தாவனம் செல்லவும். அடிக்கடி மந்திராலயம் சென்று ராகவேந்திரரை தரிசிக்கவும். பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்க்கை வளமையாகும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி பெறக் கூடியவர்கள்.
சனி திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், புதன் திசை வரை தொடரும். செய்யும் செயல்களை திட்டமிட்டு செய்வதும், சரியான நேரத்தில் செய்வதும் உங்களின் பழக்கம். இருந்தாலும், நீங்கள் எடுத்த முடிவே சரியானது என்று கூறும் குணத்தை விடவும். எந்த செயலையும் பெற்றவர்கள், பெரியவர்கள் ஆலோசனையுடன்முழுமையாகவும் சரியாகவும் செய்வது நல்லது.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை பெற்றோர் பிறருடன் ஒப்பிடாமலும், அன்புடன் வளர்த்தாலும், இவர்கள் மாணவப் பருவத்தில் சாதனைகள் பல புரிவார்கள். எங்கும் எதிலும் நாமே முதலாவதாக இருக்க வேண்டும் என்ற நினைப்பு உங்களுக்கு இருக்கும். நண்டர்கள் வட்டாரத்தில் கூட உங்களுக்கு தான் முன்னுரிமை தர வேண்டும் என நினைப்பீர்கள். அனைவரிடமும் சமமாகவும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் கொண்டால், நண்பர்கள் மத்தியில் உங்களுக்க சிறந்த வரவேற்பு இருக்கும். எதற்கும் சலிக்காமல் முயற்சி மேற்கொண்டால் வெளிநாடுகளில் சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எலும்பு, பல் சம்பந்தப்பட்ட நோய், காது, மூக்கு, தொண்டையில் சிரமம் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை எடுக்கவும்.
ஒவ்வொரு செவ்வாயும், காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறந்த பலன் தரும். எந்தவொரு புதிய செயல் தொடங்குமுன் அருகிலுள்ள துர்க்கையை வழிபாடு செய்து விட்டு தொடங்கவும். அடிக்கடி அறுபடை வீடு முருகன் கோயில்களில் ஏதேனும் ஒன்றை தரிசிக்கவும். செயல் கெள். புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன், பக்கத்திலுள்ள துர்க்கை கோயிலுக்குப் போய் வாருங்கள். வருடத்திற்கு ஒருமுறை அறுபடை வீடுகளுள் ஏதாவது ஒரு தலத்திற்குச் சென்று வணங்குங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், பட்டீஸ்வரம் துர்க்கைக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்க்கை வளமையாகும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள், எதையும் நிதானமாக செய்து பெருமை பெறுவீர்கள்.
புதன் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேதுதிசை வரை தொடரும். சில மாணவர்களுக்கு சுக்ர திசையிலும் இது தொடரலாம். பொதுவாகவே உங்களுக்கு அறிவாற்றல் அதிகம் இருக்கும் உங்களுக்கு. ஆனால் தேவையில்லாத புகழுக்கு நீங்கள் மயங்குவதால், அகந்தை உண்டாகி உங்களது வெற்றிக்குத் தடையாக மாறும். எப்போதும் அகந்தையும் தற்பெருமையும் நீக்கினால் எளிதில் வெற்றி கிடைக்கும். வெளிநாடுகளில் சென்று படிக்க விருப்பம் உள்ள நீங்கள் சரியான நபர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் படி நடந்தால் வெற்றி நிச்சயம்.
கல்வி நிறுவனங்களுடன் வெளியூர் சுற்றுலா செல்லும் போது நீர்நிலைகளில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. விஷ பூச்சிகளால் ஆபத்து ஏற்படும் என்பதால் எச்சரிக்கையுடன் இருங்கள். சரியான நேரங்களில் படிப்பதும், படித்ததை அடிக்கடி எழுதிப்பார்ப்பதன் மூலமும் அதிக மதிப்பெண் பெறலாம். கழுத்து எலும்புத் தேய்மானம், முதுகுத்தண்டுவடம் வலி, கீழே விழுந்து அடிபடுதல் போன்ற பிரச்னை ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.
ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. எந்த ஒரு புதிய செயலை தொடங்கும் முன் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். அடிக்கடி ஆலங்குடி தட்சிணாமூர்த்தியையும், ஆபத்சகாயேஸ்வரரையும் வழிபாடு செய்யுங்கள். குருபகவானையும் கும்பிட்டு வாருங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், திருப்பதி பெருமாள், பத்மாவதி தாயாரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.
கேது திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சுக்ர திசை வரை நீடிக்கும். ஒரு சில மாணவர்களுக்கு சூரிய திசையிலும் தொடரலாம். உங்களுக்கு எதையும் சீராகவும் சிறப்பாகவும் செய்திடும் திறமை உண்டு. சோம்பல் படாமல் எடுத்த காரியத்தை முடித்தால் மாபெரும் சாதனைகள் புரியலாம். மிக எளிதாக புகழுக்கு மயங்கிவிடுவீர்கள். நட்புக்காக எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்களிடம் கவனம் தேவை. வெளிநாடு சென்று படிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எளிதில் நிறைவேறும். எந்த செயலை தொடங்கும் முன் ஆஞ்சநேயரை வழிபட்டு தொடங்குவது சிறப்பு.
ஞாபக சக்தி அதிகரிக்க சிறுவயதிலிருந்து தியானம், யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுங்கள். தினமும் இறைவனை வழிபாடு செய்வது வெற்றிக்கு வழி வகுக்கும். வயிறு, ஜீரண உபாதைகளும் தொண்டை பிரச்னைகளும் உங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். இதற்கு உடனடி சிகிச்சை அவசியம்.
ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நல்லது. மகான் ராகவேந்திரரை வழிபாடு செய்யுங்கள்.அடிக்கடி பிள்ளையார்பட்டி பிள்ளையாரை வழிபாடு செய்து வாருங்கள். சென்று வருவது சிறப்பான நற்பலன் தரும்.
பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், திருப்பதி பெருமாள், குறிப்பாக பத்மாவதி தாயாரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும். அத்துடன் எப்போதும் மகாலட்சுமியை வழிபாடு செய்து வந்தால் வாழ்வு சிறக்கும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதிலும் ஆர்வமும், அயராத உழைப்பும் உள்ளவர்கள்.
உங்களின் மாணவப்பருவம், சுக்ரதிசையில் தொடங்கி, சூரியதிசை வரை இருக்கும். சில மாணவர்களுக்க இது சந்திர திசை வரை தொடரலாம். யார் என்ன கூறினாலும் அதை முழுமையாக கேட்டு செய்யாமல் ஆராய்ந்து நிதானமாக செயல்பட்டால் மனக்குழப்பம் நீங்கி வெற்றி கிடைக்கும். சரியான நண்பர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக ஏற்கவும். இதற்கான கடனுதவியை நேரடியாக கையாளவும். நல்ல குணம் உடைய நீங்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்படாமலும், யோசித்து பேசுவதன் மூலமும் சிறந்த வாய்ப்புகளை பெறலாம். இதற்காக தினமும் யோகா, தியானம் பயிற்சி செய்யுங்கள். அதிக வேகமாக வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும். எலும்புதேய்மானம், முதுகுவலி, மூட்டுவலி ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6.15 முதல் 6.45 வரை இஷ்டதெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை தொடங்கும் முன் உங்கள் அருகிலுள்ள கோயிலில் அருள்பாலிக்கும் பள்ளி கொண்ட பெருமானை தரிசியுங்கள். அடிக்கடி ஸ்ரீரங்கம் பெருமாளை வழிபடுவது சிறப்பு. பள்ளி வாழ்க்கை முடிந்ததும், மாணவப் பருவம் நிறைவடைந்ததும், திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரரையும் பொங்கு சனியையும் வழிபட்டால் வாழ்வு நலம் பெறும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள்,முயற்சிகளால் எதையும் சாதிப்பவர்கள்.
உங்களின் மாணவப்பருவம், சூரியதிசை முதல், செவ்வாய் திசை வரை இருக்கும். தேவையில்லாத கோபத்தையும், வீண் பிடிவாதத்தையும் தவிர்த்து, எதையும் நிதானமாக, திட்டமிட்டு செய்தால் பலப்பல சாதனைகள் புரியலாம். பெரியவர்கள் கூறுவதை கேட்டு நடக்கவும். போலியாகப்புழும் நண்பர்களிடம் மயங்காமல், கவனமாகப் பழகவும்.
மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக ஏற்கவும். இதற்கான கடனுதவியை நேரடியாக கையாளவும். உணர்ச்சிவசப்படாமலும், யோசித்து பேசுவதன் மூலமும் சிறந்த வாய்ப்புகளை பெறலாம். மன அமைதி பெற ஏதாவது ஓர் இசைக் கருவியை வாசிக்கப் பழகுங்கள். ஒற்றைத் தலைவலி, நரம்பு, அலர்ஜி பாதிப்புகள் நீங்க உடனடி மருத்துவம் தேவை.
ஒவ்வொரு ஞாயிறும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை தொடங்கும் முன் நரசிம்மரை வழிபாடு செய்வது நல்லது. அடிக்கடி பரிக்கல் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் சிறந்த பலனை அடையலாம். பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், ராமேஸ்வரம் ராமநாதரை வழிபட்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் எதையும் திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டு வெற்றி பெறக்கூடியவர்கள்.
சந்திர திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம். ராகு திசை வரை தொடரும். பல விஷயங்களில் எதையும் தீர்மானமான முடிவு எடுக்க முடியாமல் திணறும் நீங்கள், உணர்ச்சி வசப்படாமல் நிதானமாகவும் யோசித்தும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். மனத்தளர்ச்சி இல்லாமலும் நம்பிக்கையோடும் படிப்படியாக முயற்சிகளைத் தொடர்வது நல்லது.நண்பர்களிடம் ரகசியம் வேண்டாம்.
வெளி நாடு சென்று படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டால் இறைவனை வழிபட்டும், பெற்றோர் ஆலோசனை கேட்டும் செயல்பட்டால், முன்னேற்றம் அடையலாம். கல்விக்கான கடன் தொகையைக் கையாளும்போது மிகவும் கவனமாக கையாள வேண்டும். ஆடம்பரம், கேளிக்கைகளில் நாட்டம் உள்ள நீங்கள், படிக்கும் காலத்தில் நண்பர்களுடன் கேளிக்கை, ஆடம்பரப் பொழுதுபோக்குகளில் ஈடுபடாமல் இருந்தால் எதிர்காலம் சிறக்கும். கழிவுப்பாதை உபாதைகள், வயிற்றுக் கோளாறு ஏற்பட்டால் உடனடி மருத்துவம் அவசியம். வாகனங்களில் கவனமாக செல்லவும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல்தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். புதிதாக ஏதேனும் செயல் தொடங்கினால் பெருமாள் வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி திருப்பதி சென்று தரிசியுங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், மதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால், வாழ்க்கை வளமையாகும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள், மன உறுதியும், ஞாபகசக்தியும் உள்ளவர்கள்.
செவ்வாய் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகுதிசை வரை இருக்கும். தலைக்கனம் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எதையும் யோசித்து நிதானமாக செயல்படவும். சட்டென்று பேசுவதை தவிர்க்கவும். மனக்குழப்பம் நீங்க தியானம் யோகா பழகுவது நல்லது. உடலிலிருந்து அதிக வியர்வை வெளியேறும் வகையில் சிறு வயது முதல் உடல்பயிற்சி செய்தால் சிந்திக்கும் திறன் அதிகரித்து, ஞாபக சக்தி வளரும்.
மேல்படிப்புக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக ஏற்கவும். இதற்கான கடனுதவியை நேரடியாக கையாளவும். இரவில் கண்விழித்து படிக்காமல், அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. தற்பெருமை பேசும் நண்பர்களை தவிர்க்கவும். அலர்ஜி, காய்ச்சல் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.
ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடுசெய்யுங்கள். எந்த ஒரு புதிய செயல் தொடங்கினாலும், சிவனை வழிபடுவது நல்லது. அடிக்கடி ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை வழிபாடு செய்யுங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், திருப்பதி பெருமாள், பத்மாவதி தாயாரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் சட்டெனப் புரிந்துகொள்ளும் சமயோஜித புத்தி உள்ளவர்கள்.
ராகு திசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு திசை வரை தொடரும். அதிக ஞாபக சக்தி உங்களுக்கு இருப்பதால், படிப்பதை விரைவில் ஞாபத்தில் வைத்து, அதை தேவைப்படும் நேரத்தில் உபயோகப்படுத்துவீர்கள். இந்த திறமையால் பிறர் மனம் புண்படும்படியாகாத படி நடந்து கொள்ளுங்கள். இதனால் உங்களை சுற்றியிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் எந்த செயல் செய்தாலும் உடனே வெற்றி நிச்சயம் என இருந்தாலும், எந்த செயலை செய்தாலும், நிதானமாகவும், கோபப்படாமலும் செய்தால் சிறப்பான நன்மை கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு அவசியம் கிடைக்கும்.
நண்பர்களிடத்தில நல்லபெயர் உங்களுக்கு இருந்தாலும், தேவையில்லாத நட்பை விலக்குவது நல்லது. நண்பர்களுக்காக தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். அதனால் சிக்கல் உண்டாகும். சுகாதாரமற்ற உணவுப்பொருள்களை சாப்பிடுவதால் தொற்று நோய் மற்றும் வயிற்று தொந்தரவுகள் ஏற்படும். இதற்கு உடனடி சிகிச்சை எடுக்கவும். இரவில் கண்விழிப்பதை தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.
ஒவ்வொரு திங்களும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயல்களை தொடங்கும் முன் அருகிலுள்ள துர்க்கை அம்மனை வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி விழுப்புரம் அருகிலுள்ள பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள். புதிய முயற்சிகளுக்கு முன் பக்கத்து கோயிலில் துர்க்கையை தரிசியுங்கள். மூன்று வருடத்திற்கு ஒருமுறை பூவரசன் குப்பம் சென்று நரசிம்மரை வழிபடுங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும்,ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் அமைதியும் ஆர்வத்துடன் கற்கும் குணமும் உள்ளவர்கள்.
குருதிசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சனிதிசை வரை தொடரும். யார் எதற்காக பாராட்டினாலும் அதனால் சிறிதும் கர்வம் உங்களுக்கு ஏற்படாது. உங்கள் மீது உங்களுக்கு உள்ள அளவு கடந்த நம்பிக்கையில் நீங்கள் செய்யக்கூடிய செயல்களை கடைசி நேரம் வரை தள்ளிப்போட்டு விட்டு, பின் அவசரமாக செய்வதை தவிர்க்கவும். சோம்பல் படாமல் ஒரு காரியத்தை திட்டமிட்டபடி முடித்தால் வெற்றிகள் உறுதியாகும்.
நண்பர்களிடத்தில் எந்த ரகசியமும் கூற வேண்டாம். அனைவரிடமும் நன்றாக பழகுங்கள். உங்களது குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வந்தால்தான் எதிலும் வெற்றி பெற முடியும். வீட்டிற்குள்ளேயே இருப்பதை விட்டு, நிறைய புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மறுக்காதீர்கள். அலர்ஜி, மூச்சுப்பிரச்சனை, பல்சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்பட்டால், உடனே சிகிச்சை எடுக்கவும். நேரம் மாறி மாறி படிக்காமல் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் படிப்பது நல்லது.
ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஏதேனும் ஒரு செயலை செய்ய தொடங்கும் முன் அருகிலுள்ள மகானின் பிருந்தாவனத்திற்கு சென்று வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி மந்திராலயம் சென்று ராகவேந்திரரை வழிபாடு செய்யுங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும்,திருச்செந்தூர் சென்று சுப்பிரமணியரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் கவனமாகவும் முழுமையாக முயற்சித்தும் வெற்றிகளைப் பெறக் கூடியவர்கள்.
சனி திசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம் புதன்திசை வரை தொடரும். படிப்பது உட்பட எந்த செயல் செய்தாலும் அதை திட்டமிட்டும், குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிப்பதும் உங்களுக்குரிய விசேஷ குணம். நான் செய்தது சரி என்ற வறட்டு பிடிவாத குணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, உற்றார், உறவினர், பெற்றோர்களை மதித்து அவர்களின் ஆலோசனைப்படியும் செய்வது மிகவும் முக்கியம்.
பெற்றோர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை அன்பு காட்டியும், பிறருடன் ஒப்பிட்டு பேசாமலும் வளர்த்தால் இளமையிலேயே மாபெரும் சாதனைகள் பல புரிவார்கள். இவர்களுக்கென நண்பர்கள் வட்டாரம் அதிகம் இருக்காது. எதிலும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். வயதிலும் அறிவிலும், உங்களை விட கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால், காரியங்களை எளிதில் வெல்லலாம். மன அமைதிக்கு ஏதேனும் ஒரு கலையை கற்பது சிறப்பு. பெற்றோரை தவிர பிறர் உதவியின்றி நேரடியாக கவனம் செலுத்தினால் வெளிநாட்டு கல்வி வாய்ப்பு உங்களுக்க கிடைக்கும். இ.என்.டி மருத்துவரை நாடி உடலை பரிசோதிக்கவும்.
ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.எந்த ஒரு செயலைத் தொடங்கும்முன், அருகிலுள்ள சிவன் கோயிலை தரிசிப்பது நல்லது. <<லுக்குப் போய் வாருங்கள். அடிக்கடி திருவாரூர் அருகிலுள்ள திருக்கொள்ளிக்காடு சென்று அங்குள்ள அக்னீஸ்வரøயும் பொங்கு சனியையும் வணங்குங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும்,நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் முயற்சிகளால் தடைகளை முறியடித்து முன்னேற்றம் காணக் கூடியவர்கள்.
புதன் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேதுதிசை வரை தொடரும். சிலருக்கு சுக்ர திசையிலும் தொடரலாம். எதையும் கூர்ந்து கவனிப்பதும், உடனே புரிந்துகொள்வதும் உங்கள் குணம். ஆனால் வீண் புகழ்ச்சிக்கு மயங்குவதால், அறிவே சிலசமயங்களில் அகந்தையாக மாறி வெற்றிக்குத் தடையை உண்டாக்கி விடும். தற்பெருமையும் அகங்காரமும் தவிர்ப்பது முக்கியம். அயல்நாட்டுக் கல்வி முயற்சிகளில் ஈடுபடும் போது, நம்பிக்கையான நபர்களிடமும், பெற்றோரிடமும் ஆலோசனை கேட்டு அதன் படி நடக்கவும்.
வெளியூர் பயணங்களில் விருப்பமுள்ள நீங்கள், சுற்றுலா செல்லு<ம் இடங்களில் உயரமான இடங்களில் கவனத்துடன் இருப்பது அவசியம். எப்போதும் குறிப்பிட்ட நேரத்தில் படிப்பதும், ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பார்ப்பதும் நலவழக்கமாக்கிக் கொள்வது நல்லது. முதுகு வலி, கழுத்து வலி,அடிபடுதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டால் உடன்சிகிச்சை அவசியம்.
ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புது செயலைத்தொடங்கும் முன் பெருமாளை வழிபடுங்கள். அடிக்கடி நவக்கிரகத்தில் புதன் தலமான திருவெண்காடு திருத்தலம் சென்று சுவேதாரண்யேஸ்வரரையும், புதனையும் வணங்குங்கள்.
பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும்,ஸ்ரீரங்கம் பள்ளிகொண்ட பெருமானை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் இயல்பாகவே எதையும் சட்டெனப்புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.
கேது திசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம், சுக்ர திசை வரை நீடிக்கும். எதையும் புத்திசாலி தனத்துடன் செய்யும் நீங்கள், எதிலும் எங்கும் அவசரம், அலட்சியம் காட்டினால் அது உங்கள் வெற்றிக்கு தடையாக இருக்கும். பெரும் சாதனை புரிய முழு கவனம் தேவை. நண்பர்களிடம் மிகவும் கவனத்துடன் பழக வேண்டும். வெளிநாடு சென்று படிக்க கல்விக்கடன் தொடர்பான உங்களின் முயற்சிகள் நிச்சயம் ஈடேறும்.
எந்த ஒரு செயலைத்தொடங்கும் முன் பக்கத்துக் கோயிலில் உள்ள துர்க்கையை வழிபடுவது நல்லது. .உங்களை புகழும் போதும், திட்டும் போதும் அதற்காக உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக செயல்படுவது நல்லது. மனப்பயிற்சி பெற தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. ஒற்றைத்தலைவலி, நரம்பு உபாதை, ரத்தசோகை ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்
ஒவ்வொரு செவ்வாயும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபங்களை ஏற்றி இஷ்ட தெய்வத்தை வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு செயலை தொடங்கும் முன் துர்க்கையை வழிபடுவது சிறப்பு. அடிக்கடி பட்டீஸ்வரம் சென்று துர்க்கையையும், தேனுபுரீஸ்வரரையும் வழிபடுவது சிறப்பு. தரிசித்து பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும்,காளகஸ்தி காளத்திநாதரையும், ஞானப்ரசூனாம்பிகையையும் வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் விடா முயற்சியால் வெற்றியை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள்.
உங்களின் மாணவப்பருவம், சுக்ரதிசையில் தொடங்கி, சூரியதிசை வரை இருக்கும். ஆனாலும் சிலருக்கு சந்திர திசை வரையிலும் இருக்க வாய்ப்புண்டு.
நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சட்டெனத் தீர்மானிப்பதைத் தவிர்த்து, எதிலும் முழுமையான ஈடுபாட்டுடன் திட்டமிட்டு செயல்பட்டால் பல சாதனைகள் படைக்கலாம். நீங்கள் யாரிடமும் பகையில்லாமல் நட்பு பாராட்டுவீர்கள். ஆனால் அந்த நட்பு உங்களை ஏமாற்றும். எனவே சரியான நட்பை தேர்ந்தெடுப்பது நல்லது.
வெளிநாடு சென்று உயர்கல்வி பயில வாய்ப்பு வரும்போது, பெற்றோர் பெரியோர் ஆலோசனையுடன் செயல்படுவது நல்லது. கல்விக் கடனுக்கான முயற்சிகளை நம்பிக்கையானவர்களிடம் கேட்டு செய்வது பயன் தரும். புத்திசாலியான நீங்கள், உ<ணர்ச்சி வசப்படுவதாலும், அவசரப்பட்டு செயல்படுவதாலும் மிக அருமையான வாய்ப்புகளை இழக்க வாய்ப்புண்டு. இதனை நீக்க தினமும் சில நிமிடமாவது தியானம் செய்யுங்கள். வயிற்றில் பூச்சிகளால் தொல்லை, கழிவுப்பாதை உபாதை, தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை எடுக்கவும்.
ஒவ்வொரு புதனும் காலை 6.15 முதல் 6.45 மணிக்குள் இஷ்ட தெய்வத்திற்கு முன் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன் பள்ளி கொண்ட பெருமானை வழிபடுவது சிறப்பு. அடிக்கடி திருவனந்தபுரம் சென்று அனந்த பத்மனாபனை வழிபடுவது சிறப்பு. பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், திருப்பதியில் தங்கி வெங்கடாஜலபதியை வழிபட்டால், உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் அமைதியாகவும் திட்டமிட்டும் செயல்படக் கூடியவர்கள்.
உங்கள் மாணவப்பருவம், சூரியதிசை முதல், செவ்வாய் திசை வரை இருக்கும். ஆனாலும் ஒரு சிலருக்கு ராகு திசையிலும் படிப்பு தொடரலாம். எந்த செயல் செய்தாலும் சரியான நேரத்திலும், கவனத்துடனும் செய்யக்கூடிய நீங்கள் வீண் கோபத்தையும், பிடிவாதத்தையும் தவிர்த்தால் சிறந்த பலன்களைப் பெறலாம். பெற்றோர், ஆசிரியர் கூறியபடி நடந்து கொள்வது நல்லது. நண்பர்களால் ஏமாந்து போகும் பாதிப்பு இந்த நட்சத்திரக்காரர்களுக்கே உரியது. எனவே நண்பர்களிடம் கவனமாக பழகவும்.
உங்களுக்கு வெளிநாடுகளில் சென்று கல்வி கற்கும் வாய்ப்பு எளிதாகக் கிடைக்கும் என்றாலும் தெரியாத நபர்களிடம் மிகவும் கவனமாக செயல்பட்டால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம். பெற்றோர் உதவியுடன் வங்கிக்கடன் முயற்சிகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அடிக்கடி கோபப்படுவதும், அவசரப்பட்டு முடிவெடுப்பதும் தீய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மனதைக் கட்டுப்படுத்துவது நல்லது. மனதைக் கட்டுப்படுத்த ஏதாவது விளையாட்டில் ஈடுபடுங்கள். கண் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை அவசியம்.
ஒவ்வொரு வியாழனும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயல் தொடங்கினாலும் அருகிலுள்ள அம்மனை வழிபடுங்கள். அடிக்கடி திருவானைக் காவல் சென்று அகிலாண்டேஸ்வரியையும், ஜம்புகேஸ்வரரையும் வழிபடுவது சிறப்பான பலன் தரும். பள்ளி, கல்லூரி வாழ்க்கை முடிந்ததும், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியை வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றிபெறக் கூடியவர்கள்.
சந்திர திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகு திசை வரை தொடரும். முழு முயற்சியுடன் படிக்கும் நீங்கள், தன்னம்பிக்கை இருந்தாலும் சரியாக திட்டமிட்டு செயல்படுவது மிகவும் முக்கியம் என்பதை தெரிந்து கொண்டால் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். உங்கள் மீது உங்களுக்கு உள்ள நம்பிக்கையால் எந்த செயலையும் கடைசி நேரத்தில் அவசர அவசரமாகச் செயல்படுவீர்கள். இதை தவிர்த்து படிப்படியாக முயற்சிகளைத் தொடர்ந்து, சரியான நேரத்தில் அதை செய்து முடிப்பது நல்லது.
அயல் நாடுகளில் சென்று படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது பெற்றோர் அறிவுரைப்படி செயல்பட்டால் நல்லது. கல்விக்கடன் தொகையைப் பெற சரியான நபர்களுடன் சேர்ந்து முயற்சி செய்யவும். படிக்கும்போது நண்பர்களுடன் சேரமால் தனியாகப்படித்தால் அதிக மதிப்பெண்களை பெறலாம். மனஅழுத்தம், எலும்புத் தேய்மானம், நரம்புக் கோளாறு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை பெறவும்.
ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய செயலை செய்யும் முன்பு ஆஞ்சநேயரை வழிபடுங்கள். அடிக்கடி சங்கரன் கோவில் சென்று கோமதி அம்மனையும், சங்கர நாராயணரையும் வழிபடுங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை நிறைவு பெற்றதும், ஸ்ரீரங்கம் பள்ளி கொண்ட பெருமாளை வணங்கினால் வாழ்க்கை வளம் பெறும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் ஞாபகசக்தியும் கற்பூர புத்தியும் உள்ளவர்கள்.
செவ்வாய் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், ராகுதிசை வரை இருக்கும். எதையும் துணிந்து செய்யக்கூடிய நீங்கள், உங்கள் செயலை பணிவுடன் செய்தால் வெற்றி நிச்சயம். உங்களது மனக்குழப்பம் நீங்க தியானம் யோகா பழகுவது நல்லது. சிறுவயது முதல் உடற்பயிற்சிகளைச் செய்வதும், ஏதாவது ஒரு கலையைக் கற்பதும் உங்களது சிந்தனைத் திறனை அதிகப்படுத்தும். இதனால் மனம் தெளிந்து பாடங்கள் விரைவில் பதியும்.
நண்பர்களுக்காக எதையும் செய்யாமல், உங்களது பெற்றோர், ஆசிரியர் சொல்படி நடப்பது சிறப்பு. நீங்கள் முயற்சி செய்தால் வெளிநாடு சென்றுப் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். இரவில் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. தேவையில்லாத நண்பர்களைத் தவிர்ப்பது நல்லது. தோல் சம்பந்தப்பட்ட நோயான தேமல், ரத்தத் தொற்றுநோய், வயிற்று வலி இவைகளுக்கு உடனடி சிகிச்சை பெறவும்.
ஒவ்வொரு வெள்ளியும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியை ஆரம்பிக்கும் முன் லட்சுமி நரசிம்மரை வழிபடுங்கள். அடிக்கடி திருப்பதி சென்று வெங்கடாஜலபதியை வழிபட்டு வாருங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை நிறைவு பெற்றதும், அகோபிலம் சென்று நரசிம்மரை வணங்கினால் உரிய பணி கிடைத்து வாழ்க்கை உ<ன்னதமாகும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் சட்டென எதையும் புரிந்துகொள்ளும் ஆற்றல்மிக்கவர்கள்.
ராகு திசையில் பிறந்த உங்களின் பள்ளிப்பருவம், குரு திசை வரை தொடரும். ஞாபக சக்தி உடைய நீங்கள் படித்ததை சரியான சமயத்தில் உபயோகப்படுத்துவது உங்களின் தனி குணம். இதனால் தலைக்கணமும், அலட்சியமும் ஏற்படாமல் செயல்பட்டால் மற்றவர்களது உதவி கிடைப்பதோடு மதிப்பும் உயரும். வீண் பிடிவாதம், தேவையற்ற கோபத்தைத் தவிர்த்து விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறலாம்.
முகத்திற்கு நேராகப் புகழும் நண்பர்களைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் தேவையில்லாமல் கொடுக்கும் வாக்குறுதிகளை தவிர்த்தால் எதிலும் சிக்காமல் தப்பிக்கலாம். வெளிநாடு சென்று படிக்க விருப்பமுடைய மாணவர்களுக்கு அதற்கான கல்விக்கடன் மனம்போல் கிடைக்கும். வயிறு, மூச்சுக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், முதுகு எலும்பு பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்.
ஒவ்வொரு புதன் கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியை ஆரம்பிக்கும் முன் துர்க்கையை வழிபடுங்கள். அடிக்கடி திருநாகேஸ்வரம் நாகநாதரையும், ராகு பகவானையும் வழிபடுங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை நிறைவு பெற்றதும், வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர், தையல்நாயகியுடன், அங்காரகனையும் வழிபட்டால் உங்கள் வாழ்வு செழிப்பாகும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் இயல்பாகவே எதையும் சட்டெனப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள்.
குருதிசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், சனிதிசை வரை தொடரும். இயற்கையிலேயே ஞாபக சக்தியும், புத்திசாலித்தனமும் <உடைய நீங்கள், பலரால் பாராட்டப்படுவீர்கள். உங்களுக்கே உரித்தான சோம்பேறித் தனத்தால் உ<ங்களது பணிகளை ஒத்திப்போட்டு கடைசி நேரத்தில் அதை அவசரமாக செய்வதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் சீராகவும் சிறப்பாகவும், திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்படுத்தினால் உங்கள் வெற்றிகள் உறுதியாகும்.
வெளிநாடு சென்று பயில வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளவும். அறிமுகமில்லாதவர்களின் உதவியை நாடாமல் பெற்றோர், உறவினர்களின் ஆலோசனையின் பேரில் கல்விக்கடனுக்காக முயற்சி செய்யவும். எப்போதும் கிணற்றுத் தவளையாக இருக்காமல் புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வது நல்லது. நண்பர்களுடன் கவனமாகப் பழகவும். வயிறு மற்றும் சளித் தொந்தரவு, அலர்ஜியால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம். இரவில் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சியில் ஈடுபடும் முன் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வாருங்கள். அடிக்கடி சங்கரன் கோயில் சென்று ராகவேந்திரரை தரிசியுங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை நிறைவு பெற்றதும், திருச்செந்தூர் சென்று சுப்ரமணியசுவாமியை வழிபடுட்டால் உங்கள் வாழ்க்கை பசுமையாகும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றிகளைப் பெறக் கூடியவர்கள்.
சனிதிசையில் பிறந்த உங்களின் மாணவப்பருவம், புதன்திசை வரை தொடரும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் குணமுடைய நீங்கள், எதிலும் உங்கள் முடிவே சரியானது என்ற வீண் பிடிவாதத்தை தவிர்க்கவும். உங்களை பிறர் பாராட்ட வேண்டும் என விரும்பும் நீங்கள், முதலில் அடுத்தவரை பாராட்ட பழக வேண்டும். இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளை பெற்றோர் அடுத்தவர்களுடன் ஒப்பிட்டுக் குறைசொல்லாலும், அன்பு செலுத்தியும் வளர்த்து வந்தால் மாணவப் பருவத்தில் இவர்கள் பல சாதனைகளை புரிவார்கள்.
எங்கும், எதிலும் முதல் நபராக இருக்க வேண்டும் என்ற கொள்கை உடைய நீங்கள், நண்பர்களிடத்தில் சற்று விலகியே இருங்கள். வெளி நாடு சென்று படிப்பதற்கான வாய்ப்பை விடா முயற்சியுடன் செய்தால் எளிதில் கிடைக்கும். வயிறு, ரத்தம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை அவசியம்.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள். எந்த ஒரு புதிய முயற்சிகளைத் தொடங்கும் முன், அருகிலுள்ள அம்மன் கோயிலில் வழிபாடு செய்யுங்கள். அடிக்கடி மந்திராலயம் சென்று ராகவேந்திரரையோ, ஷீரடி சென்று சாயிபாபாவையோ வணங்குங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை நிறைவு பெற்றதும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தூய மனதோடு பிரார்த்தனை செய்தால் உங்கள் வாழ்வு சிறப்பாகும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களாகிய நீங்கள் பொறுமையாகச் செயல்பட்டு பெருமை பெறக் கூடியவர்கள்.
புதன் திசையில் பிறந்த உங்களின் மாணவப் பருவம், கேதுதிசை வரை தொடரும். சிலருக்கு சுக்ர திசையிலும் தொடரலாம். இயற்கையாகவே புத்திசாலியான நீங்கள் தேவையற்ற புகழுக்கு மயங்கினால் அதுவே அகங்காரமாக மாறிவிடும். எனவே இதை தவிர்த்தால் வெற்றி வாய்ப்பு எளிதில் கிடைக்கும். வெளிநாடு சென்று கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் தேவையற்ற நபர்களைத் தவிர்த்து பெற்றோர் மற்றும் நம்பிக்கையான உறவினர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது நல்லது. கல்விக்கடனை கல்வி பயில மட்டுமே உபயோகப்படுத்தவும்.
இரவுநேர பயணங்களின்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். விஷ பூச்சிகளால் தொந்தரவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை அவசியம்.
இரவில் கண் விழிப்பதைத் தவிர்த்து அதிகாலையில் எழுந்து படிப்பதும், பெற்றோர் ஆலோசனைப்படி நடப்பதும் நல்லது. பரம்பரையாக ஏற்படக்கூடிய நோய் உங்களுக்கும் வராமல் முன்னெச்சரிக்கையாக சிகிச்சை மேற்கொள்வது நல்லது.
ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.15 முதல் 6.45க்குள் இஷ்ட தெய்வத்தின் முன் 5 அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எந்த ஒரு புதிய முயற்சிகளுக்கு முன் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். அடிக்கடி திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்யுங்கள். பள்ளி, கல்லூரி வாழ்க்கை நிறைவு பெற்றதும், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபனை தரிசித்தால் உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகும்.