பதிவு செய்த நாள்
06
நவ
2014
12:11
பவானி : பவானி, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில், அகில பாரதிய துறவியர் சங்கத்தின், நான்காம் ஆண்டு அன்னை காவிரி தீர்த்த நதி பாதுகாப்பு ரத யாத்திரை குழுவினர் வந்து, காவிரி அன்னைக்கு ஆராட்டு நடத்தி, சிறப்பு வழிபாடு செய்தனர். புண்ணிய நதிகளில் ஒன்றான கங்கை, ஐப்பசி (துலா மாதம்) மாதத்தில், தன்னை புனிதப்படுத்திக் கொள்ள, காவிரியுடன் கலப்பதாக ஐதீகம். இதனால், இம்மாதம் மிகவும் பிரசித்தமானதாக கருதப்படுகிறது. தவிர, காவிரி மாசுபடாமல் தடுக்கவும், எப்போதும் காவிரியை புனிதமாக வைத்திருக்கவும், இந்த யாத்திரையை, கடந்த, மூன்று ஆண்டுகளாக, அகில பாரதிய துறவியர் சங்கம் சார்பில், மக்கள் மத்தியில் வழிபாடு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன், கர்நாடகாவில் உள்ள தலைக்காவிரியில் இருந்து துவங்கிய காவிரி தீர்த்த நதி பாதுகாப்பு ரத யாத்திரை, பவானி, கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலை அடைந்தனர். இங்கு, மூன்று நதிகள் சங்கமிப்பதால், இங்கு காவிரி அன்னைக்கு ஆராட்டு நடந்தது. பின், சேலம், திருச்செங்கோடு, கொடுமுடி, கரூர், முசிறி, திருச்சி, அன்பில், மேலக்காவேரி, மயிலாடுதுறை சென்று வரும், 14ம் தேதி பூம்புகார், புவணேஸ்வரி கோவிலில் நிறைவு அடைய உள்ளது, என காவிரி ரத யாத்திரையின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீரத்தின சைதன்யா கூறினார்.பவானிக்கு வருகை தந்த துறவியர்களுக்கு, தியாகராஜன், மோகன்ராஜ் உட்பட சிவனடியார்கள் வரவேற்பு அளித்து, பவானி சங்கமேஸ்வரர் கோவில் வேதநாயகி படித்துறையில், பக்தர்களுக்கு மத்தியில், ரதயாத்திரையில் கொண்டு வரப்பட்ட காவிரி அன்னைக்கு, புனித நீராட்டு நடத்தி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, ஆராட்டு வழிபாட்டினை, மதுரை வித்தியாம்பாள் சரஸ்வதி சுவாமி, பெங்களூரு கணேஷ் சொர்யாணந்தகிரி, திருவாடுதுறை குமாரசாமி, சங்கமேஸ்வரர் கோவில் மணிகண்ட ஐயர் உட்பட பலர் நடத்தினர்.