பதிவு செய்த நாள்
10
நவ
2014
11:11
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் டிச., 1ல் கோலாகலமாக நடைபெற உள்ளது. கோவில் சுற்றுப்பிரகாரத்தில் புதிதாக நான்கு சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், பிரதிஷ்டை செய்ய உள்ள விக்ரகங்கள், மாமல்லபுரத்தில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன. அவ்விக்ரகங்களுக்கு ஜலாதி வாசம் நடத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
திருப்பூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் டிச., 1ல் நடக்கிறது. சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஹயக்கிரீவர், ஸ்ரீதன்வந்திரி பெருமாள் ஆகிய நான்கு புதிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சன்னதிகளில் பிரதிஷ்டை செய்வதற்காக, மாமல்லபுரத்தில் உள்ள சிற்பிகளால் புதிய விக்ரகங்கள் செய்யப்பட்டு, கோவிலுக்கு நேற்று கொண்டு வரப்பட்டன.புதிய விக்ரகங்கள், நீர், தானியம், பூக்களில் வைக்கப்பட்ட பிறகு, கும்பாபிஷேகம் செய்து, பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பது ஆகம விதியாகும். இதன் அடிப்படையில், சுவாமி விக்ரகங்கள் மற்றும் ஆழ்வார் விக்ரகங்கள், ஜலாதி வாசம் எனப்படும் நீருக்குள் ஒரு வாரம் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதலில், விக்ரகங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள தொட்டியில், சிலைகள் வைக்கப்பட்டன. வெட்டி வேர் போடப்பட்டு, நீர் நிரப்பப்பட்டது.
ஒரு வாரம், சுவாமிகளின் விக்ரகங்கள் ஜலாதி வாசத்தில் இருக்கும்; வரும் 16ம் தேதி முதல், ஒரு வாரம் தான்ய வாசமும், 23ம் தேதி முதல் ஒரு வாரம் புஷ்ப வாசம் செய்யப்பட உள்ளன. வரும் 27ல், முளைப்பாலிகை, தீர்த்தக்குட ஊர்வலம், 28ம் தேதி மாலை 5.00 மணிக்கு, கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள் துவங்கும்; டிச., 1ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெறும்.ஜலாதி வாசம் நிகழ்ச்சியில், அமைச்சர் ஆனந்தன், துணை மேயர் குணசேகரன், திருப்பணி குழு நிர்வாகிகள் தங்கவேல், முத்து நடராஜன், சிவராம், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.திவ்ய தேச தீர்த்தம்,திருமண் வருகை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, எம்பெருமானின் 106 திவ்ய தேசங்களில் இருந்தும், தீர்த்தம், திருமண் மற்றும் திருதுலா எனப்படும் துளசி எடுத்து வந்து, யாக சாலை பூஜை செய்யவும், கொடி மரத்துக்கு முன் அவற்றின் தீர்த்தங்கள், திருமண் வைக்கவும் திட்டமிடப்பட்டது.அதன் அடிப்படையில், பக்தர்கள் திவ்ய தேசங்களில் உள்ள கோவில்களுக்கு புனித யாத்திரை சென்று, சேகரித்து வந்தனர். நேற்று வரை, 96 திவ்ய தேசங்களில் திருமண், தீர்த்தம் மற்றும் திருதுலா கொண்டு வரப்பட்டு, தனி அரங்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் உள்ள திவ்ய தேச கோவில்களில் சேகரிக்கப்பட்ட தீர்த்தம், வரும் 12ம் தேதி கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. இவை, கும்பாபிஷேகத்தின்போது பயன் படுத்தப்பட உள்ளன.