பதிவு செய்த நாள்
11
நவ
2014
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், தீப திருவிழாவுக்காக பயன்படுத்தப்படும் தெப்பம், 35 லட்ச ரூபாய் செலவில் புதிதாக தயாரிக்கப்பட்டு அதற்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது.திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
டிசம்பர் 5ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.தொடர்ந்து மூன்று நாட்கள் அய்யங்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும், முதல் நாள் சமேத அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், இரண்டாம் நாள் பராசக்தி அம்மன், மூன்றாம் நாள் சுப்பிரமணியர், இந்த தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இதனை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.தெப்ப உற்சவத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த தெப்பம், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது, இவை பழுதடைந்த நிலையில் காணப்பட்டதால் இதனை புதுப்பிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்து, 35 லட்ச ரூபாய் செலவில் புதிய தெப்பம் செய்யப்பட்டு அதன் வெள்ளோட்டம் நேற்று அய்யங்குளத்தில் நடந்தது.இதை முன்னிட்டு, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.