பதிவு செய்த நாள்
11
நவ
2014
10:11
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு, நேற்று பந்தல் கால் நடப்பட்டது. வைணவ திருத்தலங்களில் முதன்மையாக உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், வரும் ஜனவரி, 1ம் தேதி, சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. முன்னதாக வரும் டிசம்பர், 29ம் தேதி, திருநெடுந்தாண்டவம் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பகல்பத்து உற்சவமும், ராப்பத்து உற்சவமும் நடக்கிறது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான ஜனவரி, 1ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.இதையொட்டி, நேற்று, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகே, வேதங்கள் முழங்க, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டாள் யானை பந்தல் காலுக்கு, மரியாதை செலுத்தியது. தொடர்ந்து, விஷேச பூஜைகள் செய்து, பந்தல் காலை கோவில் பணியாளர்கள் நட்டனர். விழாவில், தமிழக அரசு கொறடா மனோகரன், அற நிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன், கோவில் மேலாளர் விஜயன் உள்பட பலர் பங்கேற்றனர்.