பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
ஆத்தூர் : பெத்தநாயக்கன்பாளையம், சின்னமசமுத்திரத்தில் பழமை வாய்ந்த கொப்பு கொண்ட பெருமாள் கோவிலில் நடந்த, கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். ஆத்தூர் அருகே, பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி, சின்னமசமுத்திரம் கிராமத்தில், கல்வராயன் மலை தொடர் உள்ளது. 1905ம் ஆண்டுக்கு முன், 2,200 அடி உயரத்தில் உள்ள, மலை குன்றில் கால்நடை மற்றும் விவசாய நிலத்துக்கும், இலை, தழைகள் அறுப்பதற்கு ஏராளமான பெண்கள் சென்றனர். அதில், ஒரு பெண் காதில் அணிந்திருந்த, "கொப்பு (தோடு) கழன்று, மண் புற்றுக்குள் விழுந்ததுள்ளது. அந்த புற்று இடத்தை வெட்டியபோது, ரத்தம் வழிந்தோடியதும், பெருமாள் காட்சியளித்துள்ளார். அதன்பின், "கொப்பு கொண்ட பெருமாள் கோவில் கட்டப்பட்டு, ஆண்டு தோறும், புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில் பச்சை பந்தல் அமைத்து, கொப்பு கொண்ட பெருமாளுக்கு, திருவிழா எடுத்து, பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.பழமை வாய்ந்த கொப்பு கொண்ட பெருமாள் கோவில், மூன்று நிலை கொண்ட, 37 அடி உயர ராஜகோபுரம் கட்டிடமும் மற்றும் 11 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் சிலையும் புதிதாக கட்டப்பட்டது. கோவிலுக்கு செல்லும் வழிப்பாதையில், நன்கொடையாளர்கள் மூலம், 1,893 கருங்கல் படிகள் அமைத்தனர்.நேற்று, அதிகாலை 5.30 மணி முதல், காலை 7 மணி வரை, கோவில் மற்றும் ராஜகோபுரம் கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். 11 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, பாலமுருகன் கோவிலில், பிரதிஷ்டை செய்து, புனித நீர் ஊற்றினர்.கள்ளக்குறிச்சி எம்.பி., காமராஜ், மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஆத்தூர் எம்.எல்.ஏ., மாதேஸ்வரன், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி சேர்மன் ராமகிருஷ்ணன், வாழப்பாடி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.அ.தி.மு.க., பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக வேண்டி, சேலம் புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., மற்றும் மாவட்ட ஜெ., பேரவை சார்பில், சிறப்பு பூஜை நடந்தது. கும்பாபிஷேக விழாவுக்கு வந்த, 10 ஆயிரம் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கினர்.