பதிவு செய்த நாள்
12
நவ
2014
05:11
துறையூர்: தமிழகத்தில், வேறு எங்கும் இல்லாத வகையில் துறையூரில் அமைக்கப்பட்ட, 55 அடி உயர மலேசிய முருகன் சிலைக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. திருச்சி மாவட்டம், துறையூர் கரட்டுமலை பாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவிலில் ஆறுபடையப்பன் சிலை அமைப்பு குழு சார்பில், இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்று, துறையூர் தனபால் ஸ்தபதி மூலம், 23 அடி உயர பீடம் அமைத்து, அதில், 32 அடி உயர மலேசிய பத்துமலை முருகன் போன்ற சுதை வண்ண சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி ஸ்வாமி, மகாகணபதி, ஐயப்பன், நவகிரகம், நாகதேவதை உள்ளிட்ட பரிவார தெய்வம் புதுப்பிக்கப்பட்டு, 55 அடி உயர மலேசிய முருகன் சிலையுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை, கணபதி ஹோமம் செய்து துவங்கியது. மூங்கில் தெப்பகுளத்திலிருந்து, புனித நீர் எடுத்து, பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மாலை யாக பூஜை, இரவு ஸ்வாமி கண் திறப்பு, வாண வேடிக்கை நடந்தது. காலை யாக பூஜையுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஸ்வாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தசதானம், கோ பூஜை தரிசனம், தீபாராதனை செய்யப்பட்டது. விழாவில், சுயம்பு கோலோச்சும் முருகன் கோவில் ஸ்தாபகர் ஜானகிராம் சுவாமிகள், எம்.எல்.ஏ., இந்திராகாந்தி, கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி, விழா குழுவினர், பக்தர்கள் பங்கேற்றனர்.
சிலை அமைத்தது குறித்து ஆறுபடையப்பன் குழுவினர் கூறியதாவது: குழுவில் உள்ள, 16 பேர் சேர்ந்து, மலேசிய முருகன் சிலையை அமைக்க முடிவு செய்தோம். இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளும், நன்கொடையாளர்களும், முருக பக்தர்களும் பெரிதும் உதவினர். கடந்த ஆண்டு ஜூன், 4ம் தேதி பூஜை செய்து பணிகளை துவக்கினோம். முதலில், 16 அடி உயரத்தில் சிலை அமைக்க முடிவு செய்திருந்தோம். மலையில் சிலை அமைப்பதால், பீடம் மட்டும், 23 அடி உயரத்தில் அமைக்க வேண்டி வந்தது. அதன் பின், ஸ்வாமி சிலை, 32 அடி உயரத்தில் அமைத்தோம். 55 அடி உயரத்தில் முருகன் சிலை தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை என, பலரும் கூறினர். இந்த சிலை அமைக்க இதுவரை, 1,000 மூட்டை சிமெண்ட், எம்.ஆர்.எஸ். கோல்டு வண்ணம், 30 லிட்டர் பயன்படுத்தப்பட்டது. சிலையை சுற்றி பூங்கா அமைத்து, மின் விளக்குகளும் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.