பதிவு செய்த நாள்
12
நவ
2014
04:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த மழையில், ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழை நீர் குளம் போல் தேங்கியதால், தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதிபட்டனர். ராமேஸ்வரத்தில் காலை பலத்த மழை பெய்ததால், நகராட்சி அலுவலகம் முன்பு, தனுஷ்கோடி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து 2 மணி நேரம் பெய்த மழையில், ராமநாதசுவாமி கோயிலுக்குள் அரை அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது.
கோயில் மேல் தளத்தில் சமீபத்தில் பொருத்திய தட்டு ஓடு, மழைநீர் சேகரிப்பு பைப் இருந்தும், சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகள் சுற்றியுள்ள முதல் பிரகாரம், பக்தர்கள் நீராட செல்லும் 2ம் பிரகாரத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது, கோயில் ஊழியர்கள், பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவாமி தரிசனம் செய்ய தேங்கிய மழை நீருக்குள் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தும், புனித நீராட சென்ற பக்தர்கள் மழை நீரில் நடந்து செல்ல அச்சப்பட்டனர். சில இடங்களில் வயது முதிர்ந்த பக்தர்கள் வழுக்கி விழுந்தனர்.
பராமரிப்பு தேவை: தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் பிரசித்த பெற்ற இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையினால் சுவாமி, அம்மன் சன்னதி அமைந்துள்ள முதல் பிரகாரத்தில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. கோயில் 1, 2ம் பிரகாரம் மேல் தளத்தில் மராமத்து பணியை துரிதப்படுத்தி, வரும் காலத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.