திருக்கோவிலூர்: கார்த்திகை தீபத்திற்கு அகல் விளக்கு செய்யும் பணியில் திருக்கோவிலூர் அடுத்த ஆவியூரை சேர்ந்த மண் பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். திருக்கோவிலூர் அடுத்த ஆவியூரை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பத்தினர் அகல் விளக்கு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 500 விளக்குகள் வரை ஒருவர் தயாரிக்கிறார். இங்கு செய்யும் அகல் விளக்கிற்கு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி என சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல கிராக்கி உள்ளது. தீபத்திருவிழாவிற்காக கூடுதலாக கிடைக்கும் ஆர்டருக்கு ஏற்ப அகல் செய்யும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. மண்பாண்ட தொழிலாளர் பாஸ்கரன் (30) கூறியதாவது: அகல் விளக்கு செய்வது சுலபமான வேலை இல்லை. களிமண்ணை பதப்படுத்தி, ஊர வைத்து சக்கரத்தில் இட்டு வடிவமைக்க வேண்டும். இவற்றை காயவைத்து சூலையில் வைக்கும் வரை இயற்கை கை கொடுக்க வேண்டும். இதற்கு 5 மனித ஆட்களின் உழைப்பு தேவை. இத்தொழிலில் வருவாய் போதுமானதாக இல்லை. பரம்பரை தொழிலை விடக் கூடாது என்பதற்காக செய்கிறோம். அரசு வங்கிகளில் கடன் உதவி செய்து விற்பனை மையத்தை உருவாக்கி கொடுத்தால் இத்தொழில் புத்துயிர் பெறும்.இவ்வாறு அவர் கூறினார். கடந்த 10 நாட்களாக மழை இல்லாததால் தடையின்றி அகல் விளக்கு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மீதமுள்ள 20 நாட்களுக்கும் இதே நிலையை எதிர்பார்த்து பணியை முழு மூச்சாக செய்து வருகின்றனர்.