திருவாரூர் தியாகராஜர் கும்பாபிஷேகம்..தேரோட்டம்: அடுத்த ஆண்டும் சந்தேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2014 11:11
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர்கோவில் புதுப்பிக்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் 2015ல் கும்பாபிஷேகம் நடக்க வாய்ப்பில்லை. திருவாரூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர், ஆசியா கண்டத்தில் பெரியது என்ற பெருமைக்குரியது. தேர் பழுதடைந்ததால் முற்றிலும் பிரித்துவிட்டு புதிய தேர் வடிவமைக்கும் பணி ஆண்டு கணக்கில் நடந்து வருகிறது. அதே நிலையில் கோவில் கும்பாபிஷேகம் பணிகளும் கடந்த சில ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
இதற்கான கோவில் மதிற்சுவர்கள் மற்றும் கோபுரங்கள் விரிசல்களை சரிசெய்து, வண்ணம் தீட்டும் பணிகளுக்கு அமைக்கப்பட்ட சாரங்கள் வெயில் மற்றும் மழையில் மக்கி தானாக விழுகிறது.ஆனால் கோவில் பணிகள் முழுமை பெறவில்லை. இதனால் 2015ம் ஆண்டில் கும்பாபிஷேம் முடிந்து தேரோட்டம் நடக்க வாய்ப்பில்லை. கருணாநிதி தொகுதியில் கோவில் இருப்பதால் அ.தி.மு.க., அரசு கோவில் சீரமைப்புப் பணிகள் ஆமை வேகத்தில் நடத்துகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் திருவாரூர் வந்த இந்து சமய அற நிலை த்துறை செயலர் கண்ணன், குளத்தைப் பார்வை யிட்டார். கோவில் புனரமைப்புப் பணிகள் மற்றும் தேர் வடிவமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்யாதது வருத்தம் அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். இந்த வேகத்தில் பணிகள் நடந்தால் 2015ல் கும்பாபிஷேகம் முடிந்து தேரோட்டம் நடக்குமா என்பது கேள்விக் குறி தான்.