பதிவு செய்த நாள்
14
நவ
2014
11:11
பரமக்குடி : பரமக்குடி அருகே மந்திவலசை வைகை ஆறு மற்றும் போகலூரில் தனியார் விவசாய கிணற்றில் விஷ்ணு துர்க்கை சிலை கயிறு கட்டிய நிலையில் மீட்கப்பட்டது. பரமக்குடி அருகே பொட்டிதட்டி ஊராட்சி மந்திவலசை வைகை ஆற்றில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அனுமான் சிலை ஒன்று கிடந்தது.
இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக தாலுகா அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். மீட்கப்பட்ட சிலை பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுதவிர, மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒட்டமட காளியம்மன் கோயில் அருகில் தனியார் விவசாய கிணற்றில் சிலை கிடப்பதை விவசாயிகள் பார்த்துள்ளனர். நேற்று காலை 10 மணிக்கு தாலுகா அலுவலர்கள், சத்திரக்குடி போலீசார் முன்னிலையில் சிலையை கண்டெடுத்தனர். அச்சிலை 4 அடி உயரத்துடன், கையில் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் விஷ்ணு துர்க்கை அம்மன், எருமை தலையின் மேல் நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. நயிலான் கயிறால் சிலை கட்டப்பட்டிருந்தது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், “ போகலூரில் ரவி என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இதில் தண்ணீர் குறைவாக உள்ளதால், வேலைக்குச் செல்லும் பெண்கள் கிணற்றில் ஏதோ சிலை கிடப்பதை பார்த்துள்ளனர். உடனடியாக போலீஸ் மற்றும் தாலுகா அலுவலர்கள் முன்னிலையில் சிலையை மீட்டோம். ஏதோ கோயிலில் பூஜிக்கப்பட்ட சிலையை இந்த வழியாக எடுத்துச் செல்லும் போது, இந்த கிணற்றில் போட்டு விட்டு சென்றிருக்கலாம், என்றனர்.
இது குறித்து பரமக்குடி தாசில்தார் காளிமுத்தன்: பரமக்குடி அருகே கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகளும் ஏதோ ஒரு கோயிலில் பூஜை செய்யப்பட்ட சிலைகளாக தெரிகிறது. இதனை பெயர்த்து எடுத்த தடம் உள்ளது. ஆற்றிலும், கிணற்றிலும் இருந்து சிலைகள் மீட்கப்பட்டது. சிலை குறித்து மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம், என்றார்.