பதிவு செய்த நாள்
15
நவ
2014
11:11
திருப்பதி: திருமலையில், இன்று முதல், 300 ரூபாய் விரைவு தரிசன உடனடி பதிவு என்ற, ’கரன்ட் புக்கிங்’ சேவையை, திருமலை - திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. வார இறுதி விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில், திருமலையில், பக்தர்கள் வருகை அதிகரிக்கிறது. இதனால், பக்தர்கள் விரைவாக ஏழுமலையானை தரிசிக்க, இடைத்தரகர்களை நாடினர். இடைத்தரகர்கள், இஷ்டம் போல் பணம் வசூலித்து வந்தனர். எனவே, தேவஸ்தானம், இடைத்தரகர்களை ஒழிக்க, ஏழுமலையான் தரிசனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தது. அதில், 300 ரூபாய் விரைவு தரிசனமும் ஒன்று. இந்த தரிசனத்திலும் பக்தர்கள் வருகை அதிகரித்தது. எனவே, இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய, முதலில், 11 ஆயிரம் டிக்கெட்களை தேவஸ்தானம் அளித்தது. இதற்கு, பக்தர்களிடம் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, இந்த சேவையில் மொத்தமுள்ள, 18 ஆயிரம் டிக்கெட்களையும், இணையதள முன்பதிவுக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டது. இது, இன்று முதல், அமலுக்கு வருகிறது. உடனடி பதிவின் கீழ் வழங்கும் டிக்கெட்கள், ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போல், மற்ற சேவைகளையும் இணையதள முன்பதிவு கீழ் வழங்கவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.