பதிவு செய்த நாள்
17
நவ
2014
11:11
செஞ்சி: மேலச்சேரியில் உள்ள பல்லவர் கால குடைவரைக் கோவிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்து வருவது வரலாற்று ஆர்வலர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
செஞ்சி அருகே உள்ள மண்டகப்பட்டு, தளாவானூர் குடைவரை கோவில்கள் தமிழகத்தின் முதன்மையானவை. தளவானூரில் உள்ள சத்ருமல்லேஸ்வராயம் குடைவரை கோவிலை கி.பி., 580 முதல் 630 வரை ஆட்சி செய்த பல்லவ மன்னன் நரேந்திரன் என்னும் சத்ருமல்லனும், மண்டகப்பட்டில் உள்ள குடைவரைக் கோவிலை பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனும் கட்டியுள்ளனர்.
பழமையான கோவில்: சிங்கவரம் ரங்கநாதர் கோவில், பனமலை தாளகிரிஸ்வரர் கோவில்கள் பல்லவர்கள் கட்டியவை. மிக பழமையான குடைவரை கோவில் செஞ்சி அடுத்த மேலச்சேரியில் உள்ளது. பிரகன்நாயகி உடனுறை மத்தளேஸ்வரர் என்ற பெயரில் இக்கோவிலை வணங்கி வருகின்றனர். வரலாற்று ஆய்வாளர்கள் இந்த குடை வரை கோவிலை சிகாரி பல்லவேஸ்வரம் என குறிப்பிட்டுள்ளனர். இங்குள்ள சிறிய குன்றின், தரைப்பகுதியில் உள்ள பாறையில், மேற்கு திசை நோக்கி குடைவரை கோவிலை அமைத்துள்ளனர்.அர்த்தமண்டபம், முகமண்டபம் என பிரிக்காமல் இரண்டும் சேர்ந்து ஒரே மண்டபமாக குடைந்துள்ளனர். கருவறையின் உள்ளே தாய்ப்பாறையில் சுமார் 5 அடி உயர அளவில் 7 அடி சுற்றளவில் என் கோண வடிவில் சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளனர். கருவறைக்கு வெளியே உள்ள மண்டபத்தின் வடக்கு பகுதியில், தாய்ப்பாறையில் நின்ற நிலையில் பிரகன்நாயகியின் உருவத்தை வடிவமைத்துள்ளனர்.
பல்லவ மன்னர்களுக்கு பிறகு இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர்கள் இக்கோவிலில் விழாக்கள் நடத்த ஏதுவாக சுப்பிரமணியர், வள்ளி, தெய் வானை, பைரவர் சிலைகளை வைத்து வழிபட்டுள்ளனர். அத்துடன் குடைவரையை மறைத்து கருங்கல் தூண், செங்கற்களை கொண்டு மண்டபத்தை கட்டி உள்ளனர். இவற்றிற்கு வெளியே கருவறையில் உள்ள சிவனை நோக்கி நந்தியும், நந்திக்கு பின்புறம் பலி பீடம், துஜஸ்தம்பமும் உள்ளன. நந்தி சிலைக்கு அமைத்த சிறிய மண்டபம் இடிந்து விழுந்துள்ளது. இதன் வடக்கே சிதிலமடைந்த கருங்கல் மண்டபமும், தெற்கே குடைவரை உள்ள பாறையின் தொடர்ச் சியை ஒட்டி படிகளுடன் சிறிய குளம் உள்ளது. குளத்தின் எதிரே கருங்கற்களால் கட்டப்பட்ட விக்ரகங்கள் இல்லாத இரண்டு சிறிய சன்னதிகளும், சன்னதிக்கு பின்னால் நான்கு தூண்களுடன், கலை நயமிக்க சுதை வேலைகளால் ஆன சிறிய உற்சவ மண்டபமும் உள்ளன.
மண்டகப்பட்டு, தளவானூர் குடைவரை கோவில் களின் முகப்பு தூண்களில் துவார பாலகர்களை வடித்துள்ளனர். மேலச்சேரியில் உள்ள குடைவரை கோவிலில் துவார பாலகர்கள் இல்லை. எனவே மேலச்சேரியில் உள்ள குடைவரை கோவில் தளவானூர், மண்டகப்பட்டு குடைவரை கோவில்களுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆய்வாளர்களின் கணிப்பின்படி மேலச்சேரி மத்தி லீஸ்வரர் குடைவரைக் கோவில் 4, 5ம் நூற்றாண்டில் உருவாக்கியதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த குடை வரையின் முன்பகுதியில் உள்ள வலது பக்க தூணில் பழமையான கல்வெட்டுக்கள் உள்ளன. கோவிலின் வடமேற்கே சிறிய ஏரியில் பாறை ஒன்றில் சிதிலமடைந்த கல்வெட்டுக்கள் உள்ளன.
இடியும் நிலை: குடை வரை கோவிலில் தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. இருந்த போதிலும் குடைவரையின் முன்புள்ள பிற்காலத்தில் கட்ட ப்பட்ட மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இடிந்து விழும் நிலையில் உள்ள முன்மண்டபத்தை புதுப்பிக்கவும், குடை வரையின் உள் பகுதியை பராமரிக்கவும், கல்வெட்டுக்களை படி எடுத்து ஆய்வு செய்யவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கேட்டு வருகின்றனர். அரசு தரப்பில் இருந்து நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருப்பது வரலாற்று ஆய்வாளர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.