பதிவு செய்த நாள்
18
நவ
2014
11:11
பாலக்காடு: குருவாயூர் செம்பை சங்கீத உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை பாலக்காடு மாவட்டம் செம்பையில், தம்புரா சமர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது. பிரபல சங்கீத வித்வான் செம்பை வைத்தியநாத பாகவதரின் நினைவை போற்றும் வகையில், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், நேற்று மாலை 40வது சங்கீத உற்சவ விழா நடைபெற்றது. இதையொட்டி, நேற்று காலை 10.00 மணியளவில் பாலக்காடு கோட்டாயி அருகே உள்ள செம்பை கிராமத்தில், தம்புரா சமர்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செம்பை வைத்தியநாத பாகவதரால் பயன்படுத்தப்பட்ட, 60 ஆண்டுகள் பழமையான தம்புராவை, செம்பை சுரேஷிடமிருந்து குருவாயூர் தேவஸ்தான தலைவர் சந்திரமோகன் பெற்றுக் கொண்டார். செம்பை வித்யாபீட ஆசிரியர்கள், சங்கீதார்ச்சனை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சிக்கு குருவாயூர் தேவஸ்தான துணை குழு கன்வீனர் சுரேந்திரன் தலைமை வகித்தார்; தேவஸ்தான தலைவர் சந்திரமோகன் துவக்கி வைத்தார். கர்நாடக சங்கீத மாணவர்களுக்கு உதவும் வகையில், வெள்ளிநேழி சுப்ரமணியம் தயாரித்த, ’கர்நாடக சங்கீத சாஸ்திர பிரதர்சினி’ என்ற நுாலின் நான்காம் பதிப்பை, தேவஸ்தான தலைவர் சந்திரமோகன் வெளியிட, இசைக்கலைஞர் பாலா சி.கே.ராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். செம்பை வித்யாபீடம் செயலர் கீழத்துார் முருகன் வரவேற்றார். தேவஸ்தான நிர்வாக உறுப்பினர்கள் ராஜு, ஜனார்தனன், சிவசங்கரன், அனில் தறைநிலம், மண்ணுார் ராஜகுமாரனுண்ணி, வைக்கம் வேணுகோபால், பாலா சி.கே.ராமச்சந்திரன், திருவனந்தபுரம் சுரேந்திரன், திருவல்லா சிவானந்தன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதையடுத்து, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தம்புரா, குருவாயூருக்கு கொண்டு செல்லப்பட்டது.