அழகர்கோவில் : அழகர்கோவில் மலையில் தினமும் குவியும் பாலிதீன் கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அழகர்கோவில் கள்ளழகர், மலையில் இருக்கும் சோலைமலை மண்டபம் முருகன், நுாபுர கங்கை ராக்காயி அம்மன் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். அடிவாரத்தில் சோலைமலை மண்டபம் முருகன் கோயில் வரை ஐந்து கி.மீ., மலைப்பாதைக்கு கோயில் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் நடந்தும் செல்கின்றனர். மாசடையும் சுற்றுச்சூழல்: அழகர்கோவிலில் பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை உள்ளது. ஆனால் பக்தர்கள், பஸ்சில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பாலிதீன் கழிவுகளை ஆங்காங்கே வீசுகின்றனர். காற்றில் பறக்கும் பாலிதீன் கழிவுகள் வனப்பகுதியில் பரவுகிறது. கோயில் சார்பில் பாலிதீன் கழிவுகளை ஊழியர்கள் சேகரிக்கின்றனர். அவற்றை வனத்திலேயே குவித்து தீயிட்டு எரிக்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. அதற்கு பதிலாக வெளியிடங்களில் வைத்து அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.