பதிவு செய்த நாள்
28
நவ
2014
01:11
அந்தியூர்:அந்தியூர் அடுத்த புதுப்பாளையம் ஸ்ரீகுருநாத ஸ்வாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று காலை, "அரோகரா கோஷம் முழங்க நடந்தது. அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவில், 400 ஆணடுகள் பழமை வாய்ந்தது. இக்கோவில் திருவிழாவின்போது, மாட்டுச்சந்தை, குதிரை சந்தை நடக்கும். இச்சந்தையில், பல மாநில வியாபாரிகள், மாடு, குதிரை, ஆடு போன்றவைகளை வாங்கி செல்வர். இப்பெருமை பெற்ற, இக்கோவிலில், 400 ஆண்டுகளுக்குப்பின், கோவிலில் திருப்பணிகள் நடந்தது.கடந்த, மூன்று நாட்களாக சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. புனித நீர் குடங்கள், குருக்கள் மற்றும் அறங்காவலர் குடும்பத்தினர், திருப்பணி உபயதாரர்கள் மூலம், யாகசாலையில் இருந்து, கோபுரத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. காலை, 10.30 மணிக்கு, நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ, "அரோகரா கோஷம் முழங்க, விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கும், பெருமாள், குருநாத ஸ்வாமிக்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. சிறப்பு பூஜைக்குப்பின், பக்தர்கள் மீது தீர்த்த நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, அன்னதானம் நடந்தது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகள், பவானி டி.எஸ்.பி., ராஜேந்திரன் மேற்பார்வையில், அந்தியூர் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.