திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அசாமிலிருந்து புதிதாக ஆறரை வயது பெண் யானை நேற்று வந்தது. சரவணப்பொய்கையிலிருந்து தினமும் அதிகாலை யானை மீது வெள்ளிக்குடத்தில் திருமஞ்சனம் எடுத்துவந்து, கொடிக்கம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்படும். அதன்பின்னரே மற்ற அபிஷேகம் நடக்கும். கோயில் நிகழ்ச்சிகளில் யானை பங்கு அதிகம். 1971ல் பொள்ளாச்சி டாப்சிலிப்பில் வாங்கப்பட்ட யானை அவ்வை, கோயிலில் பணியாற்றி 2012ல் இறந்தது. இதைதொடர்ந்து முறையான அனுமதியோடு தேவையான அங்க லட்சணங்களுடன் அசாமில் இருந்த ஆறரை வயது பெண் யானை நவ.,21ல் தேர்வு செய்யப்பட்டு, டாக்டர் குழுவுடன் நேற்று காலை கோயிலுக்கு வந்தது. துணை கமிஷனர் பச்சையப்பன் கூறுகையில், ”யானைக்கு இங்குள்ள மொழி, உணவு ஆகியவற்றை கற்றுக்கொடுக்க அசாமிலிருந்து இருவரும், முதுமலை காட்டிலிருந்து இருவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். விரைவில் பெயர் சூட்டப்படும். நன்கு பழகிய பின்னரே கோயில் பணிகளில் யானை ஈடுபடுத்தப்படும்” என்றார்.