பதிவு செய்த நாள்
01
டிச
2014
12:12
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம், இன்று காலை 9.47 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கான யாக பூஜை, கடந்த 28ல் துவங்கியது. நேற்று காலை 7.30 மணிக்கு, புதிய விக்ரகங்கள் மற்றும் கோபுரங்களுக்கு சாந்தி பூஜை நடந்தது.
உரல் மூலம் மருந்து தயாரித்து மூலவர், தாயார்கள், ஆஞ்சநேயர் மற்றும் சுதர்சன யோக நரசிம்ம பெருமாள், நரசிம்ம பெருமாள், ஹயக்கிரீவ பெருமாள், தன்வந்திரி பெருமாள், கருடாழ்வார், 12 ஆழ்வார்கள் விக்ரகங்களின் பீடத்தில் அமைக்கப்பட்டு, மருந்து சாத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன.தொடர்ந்து மூன்றாம் கால யாக பூஜை, நிறை வேள்வி நடந்தது. மாலை 5.00 மணிக்கு, ஸ்ரீகனகவல்லி தாயார், ஸ்ரீபூமிதேவி தாயார் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் உற்சவர்களுக்கு, 108 தீர்த்த கலச புனிதநீர் மற்றும் பல்வேறு திரவியங்கள், மூலிகைகளால் அபிஷேகம் செய்விக்கப்பட்டது. அத்துடன், புதிய உற்சவர் சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர் விக்ரகங்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு கும்ப, மண்டல, பிம்ப, அக்னியாதி பூஜைகள் நடந்தன. முன்னதாக, நேற்று காலை எம்பெருமான் கொடி மரம் முன், ஆலிலை கிருஷ்ணர் மற்றும் வெண்ணை காப்பு கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளினார். மாலை, சயன திருக்கோலத்தில் அருள்
பாலித்தார்.
இன்று காலை 7.00 மணிக்கு சாந்தி ஹோமம், தச தானம் நடைபெற்றது. 9.00 மணிக்கு, கலசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் புறப்பாடு, 9.47க்கு கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம், 10.22 மணிக்கு, மூலவர்களுக்கு புனித நீர் அபிஷேகம் நடைபெற்றது. 10.30 மணிக்கு மகா தீபாராதனை, தச தரிசனம் நடைபெற்றது.