நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும், காலம் என்ற நியதிக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். தத்துவங்களில் காலதத்துவம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது. அதனால் தான் நாம் அனைவரும் காலதேவனான எமதர்மனின் பெயரைச் சொன்னாலே பயப்படுகிறோம். ஆனால் காலதேவன் தர்மம், நீதி இவற்றிற்கு கட்டுப்பட்டவன். தர்மத்திற்கு பெயர் பெற்றவன் என்பதால் தான் தர்மராஜர் என்று அழைக்கிறோம். எமதர்மன் ஒருசமயம் சிவபெருமானிடம் தனக்கொரு உதவியாளர் தேவை என்று வேண்டினார். பிரம்மனால் படைக்கப்பட்டும் உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட தகுந்த சரியான நபர் வேண்டுமென்பதால், எமதர்மனின் கோரிக்கையை நிறைவேற்ற சிவபெருமான் ஒப்புக்கொண்டார். சூரியனுக்கும், நீலாதேவிக்கும் பிறந்த குழந்தையாகிய சித்ரகுப்தன் பிறக்கும் போதே தேஜசுடன், இடக்கையில் ஓலைச் சுவடியும், வலக்கையில் எழுத்தாணியும் கொண்டு பிறந்தார். தன் தந்தையாகிய சூரியதேவனின் விருப்பப்படி இமயமலைச் சாரலில் சிவபெருமானை நோக்கி கடும்தவம் புரிந்து எமதர்மனின் உதவியாளராகும் பதவியைப் பெற்றார். சித்ரகுப்தர் நவக்கிரகங்களுள் ஒன்றன கேதுவின் அதிதேவதை ஆவார். சித்ரகுப்தரை வழிபாடு செய்தால் கேதுவின் அருள்பெற்று, பிறவிப்பிணி நீங்கி நற்கதியை அடையலாம். காஞ்சிபுரத்3திலும், தேனி அருகிலுள்ள கோடாங்கிபட்டியிலும் சித்ரகுப்தருக்கு தனி கோயில் உள்ளது.