பதிவு செய்த நாள்
02
டிச
2014
12:12
திருவள்ளூர்: திருவள்ளூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. திருவள்ளூர், லட்சுமிபுரத்தில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலை, பகுதிவாசிகள் புனரமைத்தனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத லட்சுமி நாராயணர் கோவில் மற்றும் விமானம், ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், மற்றும் விநாயகர் ஆகியோருக்கு, சன்னிதிகள் கட்டப்பட்டன. பணிகள் முடிந்த நிலையில், மகா சம்ப்ரோக்ஷண விழா, கடந்த, 29ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு, வாஸ்து ஹோமம், கும்ப ஆராதனம் நடந்தது. மறுநாள் காலை, 11:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாத்துதல் மங்கள ஆரத்தியும், மாலை 4:30 மணிக்கு, சதுர்தசகல திருமஞ்சனம் அபிஷேகம், மஹாசாந்தி திருமஞ்சனம் ஆராதனம் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு, யாத்ராதானம் கும்பம் புறப்பாடும், காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள், மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு வாணவேடிக்கை, பஜனை குழுவினருடன், ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் வீதிஉலா நடந்தது.