பதிவு செய்த நாள்
02
டிச
2014
01:12
உலகம் சக்தியால் முன்னேறுகிறது. சக்தி இல்லாவிட்டால் நமது பக்தி வாழ்வும், செயல்பாடும் எதுவுமே உலகில் சாத்தியமில்லை.தீமையை எதிர்க்காமல் இருப்பது கூடாது. அதைத் தடுத்து தர்மத்தையும், நல்லதையும் காப்பதற்காக வீரத்தையும் பயன்படுத்து. நாம் பழைய விடியற்காலையைச் சேர்ந்தவர்கள் அல்ல. வருங்கால உச்சி வேளையைச் சேர்ந்தவர்கள்.கடவுளின் திறமை அளப்பரியது. ஆனால், அதை மறந்து விட்டு தெய்வீக அறிவில் கூட குறை காண்கிறோம்.கடவுளின் அருட்சக்தி ஒருபோதும் கண்மூடித்தனமாய் வேலை செய்வதில்லை. அவரது சக்தி ஒருபோதும் வீணாவதில்லை. மங்களமயமானவர் கடவுள். அவர் செய்யும் தீமையிலும் கூட ஒரு நன்மை நிச்சயம் இருந்தே தீரும். கண்களில் பயமற்ற தன்மை, கள்ளம் கபடமற்ற குணம் இருக்கட்டும். பேச்சிலும் ஆவேசம் தவிர்த்து இனிமை கலக்கட்டும்.கவலையற்ற சிரிப்பும், அஞ்சாத நெஞ்சமும், சந்தோஷ மனப்பான்மையும், நன்ம்பிக்கை யும் கொண்டவனாக எப்போதும் இரு. சுகத்தை மட்டுமே விரும்புவதால் துக்கத்தைக் கண்டு அஞ்சுகிறாய். அதனால் தான் அடுத்தவரை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலை உருவாகிறது.ஒருவனிடம் நான் என்ற அகந்தை உணர்வு எப்படி வந்தாலும் அதை களைந்து விடுவது நல்லது. உலகைத் தோற்றுவித்தவள் தெய்வீக அன்னையான மாகாளியே. அவளின் ஒரு சக்தியே பாரத மாதா. சொந்த நாடே நம் அன்னையும், தெய்வமும் ஆகும். பராசக்தியிடம் உன்னை ஒரு கருவியாக மற்றிக் கொள். அவளின்றி உன்னால் எதுவும் செய்ய முடியாது.பராசக்தி அன்னைக்குப் பணிபுரிந்திடு. அவளை அன்புடன் வழிபடு. உன் பொருட்டு எல்லா செயல்களையும் விரைவாகவும், உறுதியாகவும் நிறைவேற்றிக் கொடுப்பாள்.புன்னகை புரியத் தெரியாத ஒரு கடவுளால் இந்த நகைச்சுவை ததும்பும் உலகத்தைப் படைத்திருக்க முடியாது.உலகை வழிநடத்தும் சர்வ ஞானி கடவுள். நமக்கும் அப்பாற்பட்ட அருட்சக்தியே கடவுளாக இருக்கிறது.மனிதர்களை நேசிப்பதோடு, அவர்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள். ஆனாலும் யாருடைய பாராட்டுதலுக்கும் ஆசைப்படாதே.கடவுளின் ஏவலாளாய் இருப்பது மதிப்பிற்கு உரியது. அவருக்கு அடிமையாய் இருப்பது அதை விடச் சிறந்தது.விவேகமுள்ள சிறந்த நண்பன் கடவுள் மட்டுமே. ஏனெனில் எப்போது அடிக்க வேண்டும் என்பதும், அரவணைக்க வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். கொடுமையை உலகில் இருந்து ஒழிக்க முடியாது. ஆனால், அதை அன்பாகவும், ஆனந்தமாகவும் மாற்ற முடியும். அறியாமையில் மூழ்கடிக்கும் வெட்கத்தைக் கைவிடுங்கள். வெட்கம் அழகின் குறியீடாக, ஒழுக்கத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் கூட தேவையில்லை.உலக அமைப்பே விசித்திரமாக இருக்கிறது. அறிவு உள்ளவரை அறியாமையும் இங்கு இருந்தே தீரும்.பயனற்ற கற்பனையை விட்டொழி. அதனால் காலம் தான் விரயமாகிறது. கண்களைத் திறந்து உலகத்தை உள்ளவாறே உணர்ந்து கொள். காவியுடைக்கு மதிப்பளி. ஆனால் அதை அணிந்திருப்பவரையும் கவனித்தே மதிப்பிடு.
(மகான் அரவிந்தர்)