வங்காள விரிகுடாவுக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் மத்தியில் உள்ள ராமேஸ்வரத் தீவில், கோதண்டராமஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. பத்தடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் மூலவர், கோதண்டராமர். மூலஸ்தானத்தில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் உள்ளனர். ஆஞ்சநேயர் அருகில் இருக்கிறார். ராமரை வணங்கியபடி விபீஷணன் உள்ளான். ராமரை சரண் புக விபீஷணன் வந்த போது; அனைத்து வானரப் படைகளும் அவரை சந்தேகத்தோடு பார்க்க, ஆஞ்சநேயர் மட்டும் விபீஷணனின் குணாதிசயங்களைப் புகழ்ந்து கூறி, அவனைச் சேர்த்துக் கொள்ளும்படி பரிந்துரைக்கிறார். ஆகவே, இவருக்கு பரிந்துரைத்த ஆஞ்சநேயர் என்று பெயர். யுத்தத்துக்கு முன்பாகவே விபீஷணனுக்கு, இத்தலத்தில் சமுத்திர ஜலத்தினால் அபிஷேகம் செய்து, இலங்கேஸ்வரனாக முடிசூட்டியதாக் கூறுகிறது புராணம்.