குன்னூர் : ஜெகதளா கிராமத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் ஆண்டுதோறும் ஹெத்தையம்மன் பண்டிகையை டிசம்பர், ஜனவரி மாதங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான திருவிழா, ஜெகதளா கிராமத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் கோலாகலமாக துவங்கியது. இதனையொட்டி ஹெத்தைக்காரர்கள் எனப்படும் பக்தர்கள் 48 நாட்கள் விரதம் மேற்கொண்டனர்.நேற்று காலை 8:00 மணிக்கு ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக தாய்வீடான கொதுமுடி கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டனர். இதில், விரதம் மேற்கொண்டுள்ள பூசாரி உட்பட ஹெத்தைக்காரர்கள் அணிவகுத்து செல்ல, நூற்றுக்கணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர், சுத்தகல் கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்று, கிராம மக்களுக்கு ஆசி வழங்கினர். இந்த பயணம் இன்னும் சில நாட்கள் தொடர உள்ளது. வரும் ஜனவரி மாதம் 12ம் தேதி, ஹெத்தையம்மன் பண்டிகை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.